நாடளாவிய ரீதியில் பல்வேறு கட்சிகள் வேட்பு மனு தாக்கல்
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் காலம் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சுயேட்சைக் குழுக்கள் என்பன இன்றைய தினம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இவற்றில் பெரும்பாலான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்..
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு சுயேச்சைக் குழுவாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் இந்த வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன், முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன் உள்ளிட்ட 9 பேர் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று முற்பகல் 10.30 மணியளவில் வீ.ஆனந்தசங்கரியை முதன்மை வேட்பாளராகக் குறிப்பிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவைக் கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியினர் யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, டேவிட் நவரத்தினராஜ் தலைமையில் யானைச் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான வேட்பாளர் அணியினர் வேட்புமனுவைக் கையளித்தனர்.
சர்வஜன அதிகார கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று வெள்ளிக்கிழமை கையளித்தனர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சர்வஜன அதிகார கூட்டணியினர் பதக்கச் சின்னத்தில் களமிறங்குகின்றனர்.
அவர்கள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று முற்பகல் 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அருண் சித்தார்த் தலைமையில் சர்வஜன அதிகார கூட்டணியினர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அங்கஜன் இராமநாதன் தலைமையிலான ஜனநாயகத் தேசியக் கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று வெள்ளிக்கிழமை கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் எம்.பி. அங்கஜன் இராமநாதன் தலைமையிலான ஜனநாயகத் தேசியக் கூட்டணியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டிச் சின்னத்தில் களமிறங்குகின்றனர் . அவர்கள் இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
அங்கஜன் இராமநாதன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா
நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரான அனுஷா சந்திரசேகரன் மற்றும் ஷான் பிரதீஷ் உள்ளிட்ட குழுவினர் (11.10.2024) இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளாரான அனுஷா சந்திரசேகரன் மற்றும் கட்சியின் சார்பில் இணைந்து இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸின் மகன் ஷான் பிரதீஷ் ஆகியோர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.