சுயலாபத்திற்காக செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் : கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு
தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கூட தங்களின் சுய இலாபத்திற்காக, ஒற்றுமையாக செயல்பட்டு பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தங்கள் சுயநலத்திற்காக தங்களது கட்சி பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக வடக்கு - கிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் நடந்து கொண்டுள்ளார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் தமது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
வேட்பு மனுத் தாக்கல்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்பு பெண் பிரதிநிதி ஒருவர் உட்பட எட்டு பேர் கொண்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதன்போது ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கோவிந்தன் கருணாகரம்,
தமிழ் மக்கள் கடந்த கால முதல் இந்த நாட்டிலே எப்படித்தான் வாழ்ந்து வந்தார்கள் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, எங்களது மக்களது உரிமைகளை பெறுவதற்கு நாம் ஆணித்தனமாக ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவை உள்ளது.
வடக்கு - கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி செயற்படுகின்றது. எங்களது வாக்குகளை பிரிப்பதற்காக சில சுயாட்சிக் குழுக்களும் இங்கு களமிறங்கியுள்ளன, அவர்கள் பெரும்பான்மையினரின் தூண்டுதலால் தமிழ் மக்களின் வாக்கை பிரிப்பதற்கும் சிதைப்பதற்கும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கூட தங்களின் சுய இலாபத்திற்காக, ஒற்றுமையாக செயல்பட்டு பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தாங்கள் சுயநலத்திற்காக தங்களது கட்சி பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் நடந்து கொண்டுள்ளார்கள்.
எங்களால் தமிழ் மக்களுக்கு தெரிவிக்கக் கூடிய விடயம் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எங்கள் எட்டு பேரில் யார் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார் என்பது எமக்கு முக்கியமல்ல சங்கு சின்னம் அமோக வெற்றி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.








சன் டிவியில் கணவன், ஜீ தமிழில் மனைவி என நடிக்கும் ரியல் சீரியல் ஜோடிகள்... யாரெல்லாம் பாருங்க Cineulagam