அரசியல்வாதியின் மகனின் நடவடிக்கையால் டொலர்களை இழக்கும் இலங்கை
பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கு சொந்தமானது என கூறப்படும் இலங்கை தனியார் நிறுவனம் ஒன்றினால் விமான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதனை வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் அதிக டொலர் வருமானம் பெற்ற விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் வாய்ப்பை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இழந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விமானங்களுக்கான எரிபொருள்
45000 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றி வந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவை முனையத்தில் இறக்கப்பட்டது.
அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள களஞ்சியசாலைகளுக்கு ரயில் மூலம் எரிபொருளை அனுப்புவதற்கு கூட்டுத்தாபன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு பெறப்பட்ட எரிபொருள் கையிருப்பு கடந்த வாரம் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான விமானங்களுக்கான எரிபொருள் பிரிவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள விமானங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்திற்கு லாபம்
எரிபொருளை இறக்குமதி செய்த நிறுவனம் விமான எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் டொலர் வருமானத்தை பெற்றுக்கொள்வதாகவும், அதன் செயற்பாடுகளுக்காக அந்த நிறுவனம் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூபாவில் செலுத்துவதாகவும் கூட்டுத்தாபன ஊழியர்கள் மேலும் தெரிவித்தனர்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட்ட விமான எரிபொருள் விநியோகம் மற்றும் விமானத்திற்கு எரிபொருள் இறக்குமதி செய்தல் என்பன இதுவரை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்டது, இதன்மூலம் கூட்டுத்தாபனம் பாரிய அளவு டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக அண்மையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் விமான எரிபொருள் இறக்குமதி நிறுத்தப்பட்டது.
தனியார் நிறுவனம் ஒன்று விமான எரிபொருளை இறக்குமதி செய்து அதனை கூட்டுத்தாபனத்தின் ஊடாக விற்பனை செய்துள்ளது. இதனால் அரசியல்வாதியின் மகன் பெரும் இலாபத்தை ஈட்ட முடியும் என குறிப்பிடப்படுகின்றது.