இலங்கையின் பரிதாப நிலை - பசியால் வாடும் குழந்தைகளுக்காக தந்தையர்கள் சிலரின் முடிவு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்தியஸ்தர மற்றும் நாளாந்த வருவாயை ஈட்டும் குடுபங்கள் மிகவும் வறுமையில் வாடிவருகின்றன.
பல குடும்பங்களில் ஒருவேளை உணவை பெற்றுக்கொள்வதில் சவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சிறுவர்கள், குழந்தைகள் உள்ள குடும்ப தலைவர்கள் அவர்களுக்கு தேவையான உணவுகளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வருமானத்தை தேட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இந்நிலையில் குழந்தைகளின் பசிகளை போக்க கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதில் அநேகமானவை குழந்தைக்கான பால்மாவினை திருடிய சம்பவங்களே.
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு, பொரளை பிரதேசத்தில் பசியால் வாடும் பிள்ளைக்காக திருடிய தந்தை பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பதிவாகி உள்ளது.
2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் 3 கிலோ கிராம் அரிசி மற்றும் சமபோஷ பக்கட் ஒன்றிற்கு பணம் செலுத்தாமல் தப்பிச் செல்லும் போது, பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிபட்டுள்ளார்.
குறித்த 27 வயதான இளைஞன் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும். அவர் கூலி வேலை செய்து அன்றாடம் குடும்பத்திற்கு உணவளித்து வந்துள்ளார்.
பிள்ளைகாக திருடும் தந்தை
இந்நிலையில் கடந்த 19ஆம் திகதியன்று அவருக்கு எதுவித வேலையும் கிடைக்காத நிலையில் பிள்ளைகள் பசியில் வாடியுள்ளனர். ஒன்றும் செய்ய முடியாத நிலையில் பொரளை சதொச நிலையத்திற்கு சென்ற நபர் 3 கிலோ கிராம் அரிசி மற்றும் சமபோஷ பக்கட் ஒன்றை கையில் எடுத்துள்ள நிலையில் பணம் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார்.
எனினும் பாதுகாப்பு பிரிவினரால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பணம் செலுத்தாமல் செல்வது திருட்டு செயல் என கூறிய பாதுகாப்பு பிரிவினர் பொருட்களுடன் அந்த நபரை பொரளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்
இதன் போது பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரி ஸ்ரீயாரத்ன என்பவரிடம் சதொச பாதுகாப்பு அதிகாரி முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரி, குறித்த நபர் அப்பாவி என அடையாளம் கண்டுள்ளார்.
நிலைமையை அறிந்து உடனடியாக 1000 ரூபாய் பணம் கொடுத்த அதிகாரி இதனை சதொசவில் செலுத்திவிட்டு பொருட்களை கொண்டு செல்லுமாறு அதிகாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது.
இதேவேளை, பணம் பலமுள்ளவர்கள் அயலுள்ள எளியவர்களுக்கும் உதவும் மனபான்மையை வளர்த்துக் கொண்டால் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.