நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம்! ஜனாதிபதியின் கடுமையான எச்சரிக்கை
பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகம் “பொருளாதார உரையாடல் - IMF மற்றும் அதற்கு அப்பால்” என்ற தலைப்பில் மாநாடொன்றை நடத்தியுள்ளது.
இதில் சிறப்புரையாற்றும் போதே ஜனாதிபதி குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
பசுமை பொருளாதாரம்
மேலும் தெரிவிக்கையில், பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையிலுள்ள சாத்தியக்கூறுகள் சாதகமாக உள்ளது. நாடு அதனை நோக்கிச் செல்வதுடன் விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை ஆரம்பிக்க வேண்டும்.
CPC, ஶ்ரீலங்கன், CEB ஆகியன நாட்டின் வளங்களை ஏற்கனவே அதிகளவில் வீணடித்துள்ளன. என்ற போதும், வறியவர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு என்பவற்றுக்காகவே பணம் தேவைப்படுகிறது.
ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. IMF திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது.
வாய்ப்புகளை தவறவிட்ட இலங்கை
டி.எஸ்.சேனநாயக்கவின் முன்மொழிவுகளுக்கு அமைய செயற்படாதது, 1965ஆம் ஆண்டு ஷெனோய் அறிக்கையை நடைமுறைப்படுத்தாதது உட்பட அபிவிருத்தி அடைவதற்கான வாய்ப்புகளை இலங்கை தவறவிட்டது.
1978 இனப்பிரச்சினையினால் நாட்டின் முன்னேற்றம் மந்தமடைந்தது. அதன் மூலம் நாட்டில் மீண்டும் அபிவிருத்திக்கான அடித்தளத்தை இடுவதற்கான சந்தர்ப்பம் தவறவிடப்பட்டது.
எனினும், இலங்கைக்கு ஒரு தீர்க்கமான தெரிவை மேற்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கான கடைசி சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. இல்லையெனில் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.