பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை.. எச்சரிக்கும் நிபுணர்கள்
இந்த ஆண்டில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை வெளிப்புற அதிர்ச்சிகள் மிக மோசமாக குறைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் திணைக்களத்தின் பொருளியல் பேராசிரியரான பிரியங்கா துனுசிங்க இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, 2026இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது, 2025இல் பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சியை விடக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஏப்ரல் 22) நடைபெற்ற தென்னிலங்கை ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேராசிரியர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சுமார் 30 வீத சரிவு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய தரவுகள் குறிப்பிடுவதாக பேராசிரியர் துனுசிங்க குறிப்பிட்டார்.
30 வீத சரிவு
மேலும், சாதகமற்ற வானிலை மற்றும் காலநிலை நிலவுவதால் விவசாயத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கூடுதலாக, கைத்தொழில் துறையில் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் மற்றும் ஏற்றுமதித் துறை எதிர்கொள்ளும் சவால்களைச் சுட்டிக்காட்டி, ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகளில் மந்தநிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
உலகப் பொருளாதார நிலைமைகளின் தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் தனது உலகளாவிய வளர்ச்சிக் கணிப்புக்களைக் குறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உலகப் பொருளாதார மந்தநிலை இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இரண்டையும் பாதிக்கக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், எரிபொருள், உரம் மற்றும் மின்னணு பாகங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகள், பொருளாதாரத்தின் மீது தொடர்ந்து எதிர்மறையான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.