இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
இலங்கை சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சியம்பலாண்டுவ பகுதியில் நேற்று(16.10.2022) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வட்டியை செலுத்த முடியாத சூழ்நிலை
தொடர்ந்து உரையாற்றுகையில்,“கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தனியார் கடன் வழங்குனர்களுடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முதல் முறையாக, சர்வதேச நாணய நிதியம்,சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இலங்கையின் கடன் சுமையை குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடனைத் திருப்பிச் செலுத்துவது இலங்கைக்கு கடினமாக இருக்கும், இன்னும் கடன் சுமையைக் குறைக்க வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். வட்டியை செலுத்த முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.
எனினும் பேச்சுவார்த்தைகளை முறையாக முன்னெடுத்துச் செல்ல முடிந்தால், இலங்கையின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்று நாம் நம்புகின்றோம்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள்
இலங்கையின் ராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்தியாவுடன் வோஷிங்டனில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை சனிக்கிழமை ஆரம்பித்த போது சீன நிதி அமைச்சருடன் நான் பேசினேன்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்
நிதிகள், தீவின் மருந்து மற்றும் உர இறக்குமதிகளுக்கு செலுத்த
பயன்படுகின்றன.”என கூறினார்.