இலங்கையின் மோசமான நிலை - பத்திரிகைகளின் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு
இலங்கையில் தற்போது நிலவும் உயர் பணவீக்க சூழ்நிலையால், பொருட்களின் விலை தினமும் அதிகரித்து வருகிறது.
முன்னர் ஓரிரு ரூபாவினால் அதிகரித்து வந்த பொருட்களின் விலை தற்போது ஒரே நேரத்தில் 100 அல்லது 200 ஆக அதிகரிக்கும் அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பாண் தற்போது 300 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காகிதம், மை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பத்திரிகைகளின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தலைமையில் விஷேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் வெகுஜன ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
பத்திரிகையின் விலை
மூலப்பொருட்களின் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் பத்திரிகை ஒன்றின் விலையை 100 ரூபாவாகவும் ஞாயிறு பத்திரிகையின் விலையை 200 – 250 ரூபாவாகவும் அதிகரிக்க வேண்டுமென ஊடக செயலாளர் யோசனை முன்வைத்துள்ளார். எனினும் இந்த யோசனைக்கு பத்திரிகை நிறுவன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையின் விலையை உயர்த்தினால் விற்பனை வெகுவாக குறையும் என்று கூறியுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்கனவே பத்திரிகை விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் 250 வரை விலை நிர்ணயம் செய்தால், பத்திரிகை விற்பனை முற்றாக வீழ்ச்சியடையும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.