பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க நாடாளுமன்றம் பங்களிப்பு வழங்க வேண்டும்! கரு ஜயசூரிய
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க நாடாளுமன்றம் பங்களிப்பு வழங்க வேண்டுமென்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் சபாநாயகரும், நீதியான சமூகமொன்றுக்கான அமைப்பின் தலைவருமான கரு ஜயசூரிய இது தொடர்பில் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறையின்றி அதிகரித்துக் கொள்வதற்கான 20வது அரசியல் திருத்தச் சட்டம் முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
பொதுமக்களின் அவதானம்
எனவே அதனை மாற்றியமைக்க வேண்டும் 20வது அரசியலமைப்புத் திருத்தத்தின் பாதகமான அம்சங்களை மாற்றியமைத்து, 19வது அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக உருவாக்கப்பட்ட சுயாதீன அரசியல் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். அதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் 22வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களதும் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து ஆர்வம் கொண்டுள்ள அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு சாதகமான முறையில் பணியாற்ற வேண்டும் அதே போன்று குறுகிய, நடுத்தர, நீண்ட கால இலக்குகளின் அடிப்படையில் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கரு ஜயசூரிய தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.