இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி நிலை
இலங்கையில் இருக்க வேண்டிய பல தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எதிர்காலத்தில் அரசாங்கம் விதிக்கவுள்ள வருமான வரி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கணனித் துறையில் உள்ளவர்கள் முக்கிய பங்காற்ற கூடியவர்கள் இதில் உள்ளடங்குவதாக என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
வருமான வரி அதிகரிப்பு
“ஏற்கனவே பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில் விதிக்கப்படும் வருமான வரி முக்கியமானவர்களை நாடு இழக்க நேரிடும்.
மருத்துவர்கள் போன்றவர்களுக்கான செலவுகள் ஏற்கனவே அதிகமாக உள்ளது. இதனால் அவர்களின் வருமானத்தில் எரிபொருள் போன்ற விடயங்களுக்கு அதிகம் பணம் செலவிட நேரிட்டுள்ளது.
வெளியேறும் வல்லுநர்கள்
இவ்வாறான நிலையில் அரசாங்கம் அனைத்து துறையினருக்கும் பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போதே இவ்வாறான வல்லுநர்களை நாட்டில் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
அரசாங்கம் அமுல்படுத்தவுள்ள வருமான வரி முறையின் ஊடாக சிலர் தமது உண்மையான வருமானத்தை மறைக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள வருமான வரி முறையினால் உத்தேசிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறாமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது” என பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.