இலங்கையின் இறக்குமதியில் ஏற்படும் மாற்றம்! தளர்த்தப்படவுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு இறக்குமதிகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டு வரும் சாதகமான மாற்றம் காரணமாக இறக்குமதிக்கான தடைகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இறக்குமதி தடை
பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஒகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய 1465 பொருட்களுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அண்மையில் 708 பொருட்களாக தளர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நீக்கப்படும் கட்டுப்பாடுகள்
பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இறக்குமதி கட்டுப்பாடு பட்டியலில் இருந்து பல பொருட்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை தொடர்ந்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.