மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை : எதிர் தரப்பினருக்கு நிதி இராஜாங்க அமைச்சர் கொடுத்த பதில்
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களுக்கே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் நம்பிக்கையான இலக்கைக் கொண்டிருந்தாலும், ஏனைய எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தை மாத்திரம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
மீண்டும் பொருளாதார நெருக்கடி
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,
பொருளாதார மாற்ற சட்டமூலத்தின் ஊடாக உற்பத்தித்திறனை அதிகரித்து ஒவ்வொரு பிரஜைக்கும் சம வாய்ப்புள்ள நாடாக இலங்கையை மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும்.
மேலும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைக்கொண்ட நாட்டை உருவாக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, பொருளாதார வளர்ச்சிக்கு இணைந்த வகையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், புத்தாக்கத்துடன் கூடிய ஏற்றுமதி விரிவாக்கப்பட்ட போட்டிச் சந்தையை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த சட்டமூலம் பற்றி அறியாதவர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களால் மாத்திரமே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும்.
இந்தச் சட்ட மூலத்தில் உள்ள இலக்குகளை அடைய முடியாது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான இலக்கைக் கொண்டிருந்தாலும் ஏனைய எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தை மாத்திரமே வைத்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |