இலங்கையில் தனி நபர் ஒருவருக்கு ஏற்படவுள்ள பேரிழப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் சிக்கல்
அடுத்த ஆண்டு தனி நபர் ஒருவர் 1 இலட்சம் ரூபாவை இழப்பதுடன், அவரிடமிருந்து 1 இலட்சம் ரூபா வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரி கொள்கையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தனிநபர் ஒருவர் இழந்த தொகை
தொடர்ந்தும் தெரிக்கையில்,
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் 2022.04.12 ஆம் திகதி வங்குரோத்து நிலை அறிவிக்கப்பட்டதால் இலங்கை சுயாதீனத்தன்மையை இழந்துள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார பாதிப்பினால் தனிநபர் ஒருவர் 83 ஆயிரம் ரூபாவை இழந்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஊடாக 2000 பில்லியன் ரூபா வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அதே போல் அடுத்த ஆண்டு தனி நபர் ஒருவர் 1 இலட்சம் ரூபாவை இழப்பதுடன், அவரிடமிருந்து 1 இலட்சம் ரூபா வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கறுப்பு பொருளாதார நிலைமை
வரி கொள்கையினால் மக்கள் இரு முனைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார ஒடுக்கு நிலைக்கு மத்தியில் நாட்டில் கறுப்பு பொருளாதார நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.
இரவு பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் தரப்பினர்கள் பெண் உரிமைகள் பற்றியும் பேசுகிறார்கள்.
பத்தரமுல்லை, மஹரகம மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் தற்போது ஸ்பா (மசாஜ் நிலையங்கள்) புதிதாக தோற்றம் பெற்றுள்ளன. இதற்கு யார் அனுமதி கொடுத்தது.
பொருளாதார பாதிப்பினால் அரச மற்றும் தனியார் தரப்பில் இருந்து நீக்கப்பட்ட எமது சகோதரிகள் இந்த நிலையங்களில் சேவையில் உள்ளார்கள். ஸ்பாக்கள் ' திறந்த தகாத தொழில் செய்யும் மத்திய நிலையங்கள்' என்பதை அனைவரும் அறிவார்கள்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இளைஞர் யுவதிகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள். அண்மையில் தொம்பே பகுதியில் சட்டவிரோத மதுபானனங்கள் ஸ்டிக்கருடன் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ள நிலையிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
கறுப்பு பொருளாதாரம் முழு நாட்டையும் தற்போது ஆக்கிரமித்துள்ளது. இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |