அறியாமல் இழைத்த தவறுக்காக இளைஞர்களிடத்திலும் மன்னிப்பு கோருகின்றோம்: ஓமல்பே சோபித தேரர்
உலகத்திடம் கையேந்திக் கொண்டிருக்கும் துரதிஷ்டவசமான நாடாக இலங்கை மாறும் நிலைமை ஏற்படுவதற்கு நாமும் காரணமாகியுள்ளோம் எனவும் அறியாமல் இழைத்த இந்த தவறுக்காக முதியோரிடத்திலும் இளைஞர்களிடத்திலும் மன்னிப்பு கோருகின்றோம் என ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நேற்று (03.12.2022) எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டு மக்களுக்கு கடன் சுமை
”நாட்டிலுள்ள முதியோரிடத்திலும் இளைஞர்களிடத்திலும் மன்னிப்பு கோருகின்றோம். இவ்வாறான துரதிஷ்ட நிலைமை இந்நாட்டில் ஏற்படுவதற்கு நாமும் பங்களித்திருக்கின்றோம் என்பதற்காகவே இவ்வாறு மன்னிப்பு கோருகின்றோம்.
உண்மையில் அறியாமலேயே நாம் இந்த தவறை இழைத்துள்ளோம். நாட்டில் தற்போதுள்ள சிறுவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் கடன் சுமையைக் கொண்டவர்களாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இனி பிறக்கவிருக்கும் குழந்தை மீதும் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது. கபட குணமும், சுயநலமும் கொண்ட அரசியல்வாதிகளினால் ஏமாற்றப்பட்டு நாம் இந்த நிலைமை உருவாகக் காரணமாகியிருக்கின்றோம்.
முழு நாடும் தற்போது குண்டர்களுக்கு கீழ் பணிந்துள்ளது. இந்த குண்டர்களின் அடாவடி செயற்பாடுகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. மின் கட்டணம் நூற்றுக்கு 700 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், மீண்டும் 70 சதவீதத்தினால் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குண்டர்கள் மின் கட்டணத்தை செலுத்துவதில்லை.
இவ்வாறானவர்கள் 39 பில்லியன் ரூபா இலங்கை மின்சாரசபைக்கு கடனாகும். ஆனால் வறுமையிலுள்ள நாம் அவர்களது கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எமக்கு மாத்திரம் சட்டம் காணப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு சட்டம் என்ற ஒன்று கிடையாது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
இவ்வாறானதொரு சூழலில் நாம் விசேட தேவையுடையவர்களைப் போன்றாகியுள்ளோம். ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலகிற்கு மாற்றுத்திரனாளிகள் தினம் ஒன்று. ஆனால் இலங்கையில் 365 நாட்களும் மாற்றுத்திறனாளிகள் தினமாகும்.
உலகத்திடம் கையேந்திக் கொண்டிருக்கும் துரதிஷ்டவசமான நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. அரசியல்வாதிகள் மற்றும அதிகாரிகளால் செய்யப்பட்ட குற்றச்செயல்கள் காரணமாகவே நாடு இந்த நிலைமையை அடைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.