சிங்கள தேசம் பிச்சைக்கார தேசம் அல்ல! நான் யாசகனும் அல்ல - கோட்டாபயவிடம் ரணில் கேட்ட கேள்வி
சிலர், உலகம் முழுவதும் சென்று தலைவர்களிடம் பணம் கேட்கச் செல்கிறார்கள். நான் யாசகன் அல்ல. சிங்கள தேசம் பிச்சைக்கார தேசமும் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
தேசிய வங்கியாளர்கள் ஒன்றியத்தினால் காலிமுகத்திடல் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட வங்கியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி சார் பொருளாதாரம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் நாட்டின் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஆட்டம் கண்டது. சிலர் என்னை பிரதமர் பதவியிலிருந்து விலகச் சொன்னார்கள். அவ்வாறான அரசியல் முறையுடன் முன்னோக்கிச் செல்ல முடியாது. நாட்டின் பொருளாதார மாற்ற சட்டமூலத்தை நாம் சமர்பித்த வேளையில் அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வழக்குத் தாக்கல் செய்தார்.
“இறக்குமதி அடிப்படையிலான பொருளாதாரம் தேவை” என்று அவரின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இன்றும் இறக்குமதிப் பொருளாதாரத்தை மையமாக கொண்டு செயற்படுவதாலேயே பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறோம்.
இன்னும் சிலர் அர்ஜென்டினாவின் மார்ட்டின் குஸ்மானைப் பற்றி பேசுகின்றனர். அவர் ஒரு தோல்வியடைந்த தலைவர். அதேபோல் மற்றும் சிலர், உலகம் முழுவதும் சென்று தலைவர்களிடம் பணம் கேட்கச் செல்கிறார்கள். நான் யாசகன் அல்ல. சிங்கள தேசம் பிச்சைக்கார தேசமும் அல்ல. மேலும் சிலர் இறக்குமதி சார்ந்த பொருளாதாரம் தொடர்பில் பல விடயங்களை கூறுகிறார்கள்.
“சர்வதேச நாணய நிதியம் வேண்டாம் என்று கூறியபோதும் பொருளாதார நெருக்கடி இருப்பதை கருத்தில் கொள்ளாமல் எதற்காக வரிகளை குறைத்தீர்கள்” என ஒருநாள் நான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்(Gotabaya Rajapaksa) கேட்டேன், தொழில் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையின் காரணமாகவே அதனைச் செய்ததாகக் கூறினார். அவர் சொன்னதுதான் உண்மை. அதனை நானும் அறிவேன்.
தனிமையில் கோட்டாபய
நீங்கள் ஏன் வரியைக் குறைக்கவில்லை என்றும் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அப்படிக் கேட்டவர்களை இன்று தேடிக்கொள்ள முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் தனிமையில் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
நாட்டுக்குத் தேவையான வேலைத்திட்டத்தை நாம் சரியாகத் தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும். கனவுலகில் இருப்பது நல்லதல்ல. உண்மையை அறிந்து செயல்பட வேண்டும். இன்றைய நடவடிக்கைகளே நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
நாம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகிறோம். புதிய அரசியல் முறைமையை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டு உண்மை நிலவரத்தை அச்சமின்றி பேசக்கூடியவர்களையும் உருவாக்க வேண்டும். இல்வாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இருக்காது.
நாம் எப்போதும் உண்மையைச் சொல்வோம். அரசியலில் உண்மையைச் சொல்ல அச்சப்பட வேண்டாம். அனைத்து கட்சியினரையும் ஒன்றிணைத்துதான் இந்த அரசாங்கத்தை நடத்தினேன். சில கட்சிகளில் ஒழுக்கம் இல்லாவிட்டாலும் அரசாங்கத்துக்குள் ஒழுக்கம் உள்ளது.
அதனால் அச்சமின்றி எம்மோடு இணைந்துகொள்ளுங்கள். பொதுஜன பெரமுனவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் எம்முடன் இணைந்துள்ளனர். இன்று நாம் பொருளாதாரத்தை தயார் செய்துள்ள நிலைக்கு அரசியல் முறைமை வரவில்லை. அது பற்றிய சிந்தனையுடன் பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |