போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம்: மேலும் 1,115 சந்தேகநபர்கள் கைது
தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய நேற்று சனிக்கிழமை மாத்திரம் 1,115 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
'முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு' என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் விநியோகத்தை வலுவிழக்கச் செய்தல், போதைப்பொருளுக்கான கேள்வியை இல்லாமல் ஒழித்தல், நடவடிக்கைகளை விரைவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பு, அதன் பயன்பாட்டை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகமைய, 1,115 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 1,131 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், 754 கிராம் ஐஸ் போதைப்பொருள், 531 கிராம் ஹெரோயின், 8 கிலோ 953 கிராம் கஞ்சா ஆகிய விஷ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட 31 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 63 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை 18 ஆயிரத்து 909 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.