கல்கிஸ்ஸையில் மையம் கொள்ளும் போதைப் பொருள் சாம்ராஜ்யம் : படுகொலைகள் அதிகரிப்பு
கொழும்பை அண்மித்த கல்கிஸ்ஸை பிரதேசத்தில் மையம் கொண்டுள்ள போதைப் பொருள் சாம்ராஜ்ய வலையமைப்பு காரணமாக அண்மைக்காலத்தில் மனிதப் படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்கிஸ்ஸை, படோவிற்றை பிரதேசத்தில் மையம் கொண்டிருந்த போதைப் பொருள் வர்த்தக சாம்ராஜ்யம், தற்போதைக்கு மேற்கே ஓபன் சைட், கிழக்கில் நெதிமாலை, வடக்கில் சரணங்கர வீதி வரையும் வியாபித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரிக்கும் குற்றங்கள்
இதன் காரணமாக படோவிற்றை அசங்க மற்றும் கொஸ் மல்லி ஆகிய முக்கிய போதைப் பொருள் வர்த்தகர்களின் குழுக்கள் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போட்டி காரணமாக அண்மைக்காலமாக இப்பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் மனிதப் படுகொலைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதனையடுத்து இப்பிரதேசங்களில் பொலிசாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன், படோவிற்றை பிரதேசத்தில் வசிக்கும், தற்காலிகமாக தங்கியிருக்கும் நபர்கள் மட்டுமன்றி அடிக்கடி அப்பிரதேச வீடுகளுக்கு வந்து செல்லும் நபர்கள் தொடர்பிலும் பதிவு செய்வதற்கான படிவங்களை பொலிசார் விநியோகித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கல்கிஸ்ஸை போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை கட்டுப்படுத்த பொலிசாரின் தீவிர நடவடிக்கைகள் இதுவரை வெற்றியளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.