வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்
மினுவங்கொட பிரதேசத்தில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியை தாக்கி அவரது கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி அட்டைகளை பலவந்தமாக தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட பதில் நீதவான் திருமதி சாந்தனி தயாரத்ன உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு விளக்க மறியல்
யாகொடமுல்ல, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த வீரசிங்க அசங்க ஸ்ரீமால் என்ற சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரான மனைவி தனது கணவரைப் பிரிந்து 8 வருடங்களாக வெளிநாட்டில் பணியாற்றியதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி இலங்கை திரும்பியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடுமையாக தாக்கிய கணவன்
வெளிநாட்டில் பணிபுரியும் போது, இலங்கையில் வாங்கிய வீட்டில் அவர் வசித்து வருவதாகவும், அவர் வசிக்கும் வீட்டிற்கு கணவர் சென்று தாக்கி பலவந்தமாக ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சமரசம் செய்ய பொலிஸ் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.
எனினும் சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது.