வெளிநாடு செல்ல தயாராக இருந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு
பலாங்கொடையில் இளைஞர் குழுவொன்று நீரில் மூழ்கியமையால் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனையவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கொரியா நாட்டிற்கு செல்வதற்கான பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர் குழுவொன்றே தமது சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்றையதினம் பலாங்கொடை பம்பஹின்ன சமனலவெவ வாவியிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய இளைஞன்
வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய யூ.எம்.கமல் பிரசங்க நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சுமார் ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று சுற்றுலா சென்றுள்ளது.
இதில் மூன்று பேர் வாவியில் இறங்கி நீராடியுள்ளனர். ஏனையவர்கள் கரையில் இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மூவரில் ஒருவர் நீரில் மூழ்கியதை அடுத்து ஏனைய இருவரும் அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில் குறித்த வீதியினூடாக பயணித்த ஏனைய இருவரின் உதவியுடன் இளைஞனை மீட்டெடுத்து பம்பஹின்ன பிரதேச வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
அவர் பலாங்கொடை வைத்தியசாலைக்கு பின்னர் மாற்றப்பட்டார். எனினும், அவ்விளைஞன் ஏற்கெனவே இறந்துவிட்டார் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
உயிரிழந்த இளைஞன் இரத்தினபுரி, கொடகேவல பிரதேசத்தில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்து கொரியா நாட்டிற்கு செல்வதற்கான பாடநெறியை கஹவத்தையில் பயின்றுள்ளார்.
சுமார் மூன்று மாதங்கள் பாடநெறியை முடித்துக்கொண்டு, தென் கொரியாவுக்கு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |