இலங்கை ஆரியர் சங்க பிரதிநிதிகள் முல்லைத்தீவுக்கு வருகை - பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு
முல்லைத்தீவில் பொலிஸார் மற்றும் விமானப்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து கேப்பாபுலவு விமானப்படை முகாமில் அமைந்துள்ள கோவிட் தனிமைப்படுத்தல் மையத்துக்குச் செல்லும் வீதிகள் தோறும் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளார்கள்.
முள்ளியவளை நகரிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வீதிகள் தோறும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு கேப்பாபுலவு விமானப்படை முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து முல்லைத்தீவு நகரம் மற்றும் கேப்பாபுலவு விமானப்படைத் தளத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு நகரில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேப்பாபுலவு விமானப்படைத் தளத்துக்கு முன்னால் பொலிஸார், விமானப்படையினர் இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுக் கண்காணிப்பும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு சுகாதார பகுதியினை சேர்ந்த சுகாதார பரிசோதகர்களும் விமானப்படை முகாம் முன்பாக பி.சி.ஆர் பரிசோதனைக்குத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.





