நேபாள வெள்ள அனர்த்தத்திற்கு ஓரு மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கும் இலங்கை அரசாங்கம்
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள் மற்றும் பெருமளவிலான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
நேபாளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதியுதவியை வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொதுமக்களின் துயரங்கள் குறித்து ஜனாதிபதி திசாநாயக்க தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் நேபாள மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவே இந்த உதவி வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளி விவகார அமைச்சர் சிசிர் கனாலுடன் தொலைபேசியில் உரையாடி, இலங்கையின் இரங்கலையும், நேபாளத்திற்கான முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்துடன் தொடர்ந்து நெருக்கமான தொடர்பில் இருப்பதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு மேலும் உதவிகளை வழங்குவதற்கான வழிகளை இலங்கை தொடர்ந்து ஆராயும் என வெளி விவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.