பாரிய இராணுவப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ள இலங்கை மற்றும் இந்தியா
பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக்கொண்டு இந்தியாவும், இலங்கையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 12 நாள் பாரிய இராணுவப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளன.
'மித்ரா சக்தி' என்ற இந்த பயிற்சியின் எட்டாவது பதிப்பு ஒக்டோபர் 4 முதல் 15 வரை இலங்கையின் அம்பாறையில் உள்ள போர் பயிற்சி பாடசாலையில் நடத்தப்படும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கிடையேயான நெருக்கமான உறவை மேம்படுத்துவதும், கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதும் இந்தப் பயிற்சியின் நோக்கம் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த பயிற்சியில் இந்திய இராணுவத்தைச் அனைத்து ஆயுதப்படைகளைச் சேர்ந்த 120 பேரும், இலங்கை இராணுவத்தின் ஒரு படைப்பிரிவினரும் பங்கேற்பார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பயிற்சி, சர்வதேச கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சூழலில், தந்திரோபாய அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மித்ரா சக்தி பயிற்சியின் ஏழாவது பதிப்பு 2019 இல் புனேயில் உள்ள வெளிநாட்டு பயிற்சியகத்தில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.