வெளிநாட்டு உளவுத்துறையை தீவிரமாக கண்காணிக்கும் இலங்கை
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் வழங்கும் தகவல்களை 24 மணிநேரமும் கண்காணிப்பதற்காக மூன்று தனித்தனி புலனாய்வு அமைப்புகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச பிரதானிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் புலனாய்வு அறிக்கைகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உடனடியாக தகவல்களை அனுப்பி, அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பது இந்த குழுக்களின் பொறுப்பாகும்.
கடந்த காலங்களில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் வழங்கிய அறிக்கைகள் உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
புதிய பொறிமுறைக்கான பணிப்புரை
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த புதிய பொறிமுறைக்கான பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கையின் சுற்றுலாப்பகுதிகளில் இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை சமீபத்தில் தகவல் வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து சுற்றுலாப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், இந்த தாக்குதல் திட்டம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும், அதனுடன் தொடர்புடைய ஏனையோரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சுற்றுலாப் பகுதிகளுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |