பரிந்துரைகளை விரைவுப்படுத்துங்கள்! - ஜனாதிபதிக்கு சிறப்பு கடிதம் அனுப்பிய கர்தினால்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை விரைவுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு சிறப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
2019 ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை இந்த மாத 1 ஆம் திகதி ஆணைக்குழு உறுப்பினர்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன், கடந்த தேசிய சுதந்திர தின நிகழ்வின்போது உரையாற்றிய ஜனாதிபதி, இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளதுடன், குறித்த அறிக்கையின் பிரதிகளைத் தன்னிடம் வழங்கும்படியும் கோரியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



