பதில் ஜனாதிபதியாக ரணில் பிறப்பித்துள்ள தடை! இரத்து செய்யப்பட்டுள்ள கொடி முறை
அதிமேதகு என்ற சொற்பதத்துக்கு தடை விதிக்கின்றேன் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட அறிவிப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியுள்ள நிலையில், அடுத்த வாரத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதற்கு எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்.
குறுகிய காலத்திற்கு நான் பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்க உள்ளேன. மக்கள் அரசியலில் பாரிய வித்தியாசத்தை எதிர்பார்க்கின்றனர். அதற்கு என்னால் இயலுமான விடயங்களை செய்வேன். 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை புதிய ஜனாதிபதியின் பொருட்டு நான் முன்னெடுக்கவுள்ளேன்.
நாட்டில் சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அறவழிப்போராட்டங்களை முன்னெடுக்க மக்களுக்கு உரிமை உள்ளதாகவும் அவர் கூறினார்.
இருந்தாலும், புதிய ஜனாதிபதி தெரிவின் போது சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்க முனைவதாகவும் இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாசிசவாத முறையில் சிலர் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரண்டு துப்பாக்கிகளும் குண்டுகளும் காணாமற்போயுள்ளதை சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு தரப்பினர் 24 பேர் காயமடைந்திருப்பதை நினைவுகூர்ந்த அவர், உண்மையான அறவழிப்போராட்டக்காரர்கள் அவ்வாறான வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிளர்ச்சிக்காரர்களுக்கும் அறவழிப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாகவும் கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். எனினும், அரசியலமைப்பிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என அவர் உறுதிமொழி வழங்கினார்.
எரிபொருள், மின்சாரம், குடிநீர், உணவு விநியோகம் வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறிய பதில் ஜனாதிபதி, முப்படையினர், பொலிஸாரைக் கொண்டு குழுவொன்றை அமைத்து, அது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலத்தில் இரண்டு தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமேதகு என ஜனாதிபதியை சுட்டி அழைக்கும் வார்த்தையை இன்றிலிருந்து நீக்குவதாகவும் ஜனாதிபதிக்கென்று இருக்கும் கொடியை நீக்குவதாகவும் குறிப்பிட்டார். தேசத்திற்கு ஒரே ஒரு கொடி மாத்திரமே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.