இலங்கையில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்
சித்திரை புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துப் பயன்பாடு அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, இந்த விசேட பாதுகாப்புப் பணியில் மேலதிக போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட போக்குவரத்து ஒழுங்குவிதிகள்
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களின் ரயில் நிலையங்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையங்களை மையப்படுத்தி விசேட போக்குவரத்து ஒழுங்குவிதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி பயணங்களை மேற்கொள்வதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
வீதி விபத்து
இந்த விசேட பாதுகாப்புத் திட்டம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்து பொதுமக்கள் மீண்டும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குத் திரும்பும் வரை தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வீதி விபத்துகளைத் தவிர்க்கவும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.