அதிகளவான சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு விசேட செயற்திட்டம்
இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு விசேட செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
இலங்கை சுற்றுலாத்துறை தொழிலில் ஈடுபட்டுள்ள பிரதான தரப்புகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அலரிமாளிகையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியு்ளார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, பிரதமர் அலுவலக அதிகாரியும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு விசேட செயற்திட்டம்
இதன் போது கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கைநிறைய செலவழிக்கக் கூடிய செல்வந்த சுற்றுலாப் பயணிகள் குறைந்த பட்சம் 15 இலட்சம் பேரளவிலாவது இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்காக ஈர்க்கப்பட வேண்டும். அதற்கு நீண்ட கால இலக்குகளைக் கொண்ட செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.
எதிர்வரும் 2025ம் ஆண்டளவில் சுமார் 25 லட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு கவர்ந்திழுப்பது எமது இலக்காகும். அதன் மூலம் 3.5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டிக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வௌியிட்டுள்ள சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், வருடத்தின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்குள் குறைந்தது எட்டு லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அதன் மூலம் 800மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டிக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.



