மலையக மக்களின் நாட்டிற்கான பங்களிப்பை கௌரவிக்க விசேட நிகழ்ச்சிகள்-அமைச்சரவை அனுமதி
மலையகத் தமிழ் மக்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கி வரும் பங்களிப்பை கௌரவித்து விசேட நிகழ்ச்சிகளை நடத்த ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
200 ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு
இருநூறு ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மலையகத் தமிழ் மக்கள் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெருந்தோட்டத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய மலையக தமிழ் சமூகத்தின் முதலாவது குழு இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதனை நினைவுகூறும் வகையில் 2023 பெப்ரவரியில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக ஜனாதிபதி முன்வைத்திருந்த கோரிக்கைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்த மலையகத் தமிழர்களின் சேவைகளை கௌரவித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பெருந்தோட்ட அமைச்சும் அதனுடன் தொடர்புடைய ஏனைய அரச நிறுவனங்களும் இணைந்து இதற்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் தோட்ட தொழிலாளர்கள்
150,000 க்கும் மேற்பட்ட மலையக தமிழ் தோட்ட தொழிலாளர்கள் முக்கியமாக மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கலாசாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.



