செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தின சிறப்பு பூஜை
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (29.07.2026) சிறப்பு பூஜைகள் மற்றும் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் பக்தர்களின் பங்கேற்புடன் பக்தி பூர்வமாக நடைபெற்றிருந்தது.
இதனையடுத்து, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு, ஆலய வளாகத்தை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தும் பணிகள் ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆலயத்தின் வருடாந்த பெருவிழா
ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை சிறப்பாக நடத்தும் நோக்கில் வளாகத் தூய்மைப்படுத்தல், சுற்றுப்புற பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
பௌர்ணமி தின சிறப்பு பூஜையின் போது கொக்குளாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஆலய பூசகர் ஆலய வளாகத்தினை அண்டிய பகுதியில் மீன் ஏற்றும் கூலர்ரக வாகனங்கள் தரித்து நிற்பதனை அகற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்போது ஆலய பொங்கல் நிகழ்வுக்கும், பூஜை வழிபாடுகளுக்கும் எவ்வித இடையூறும் விளைவிக்காமால் ஆதரவு வழங்குவதாகவும் பொலிஸார் இதன்போது தெரிவித்திருந்தனர்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகம் கடந்த காலங்களில் அபகரிக்கப்பட்டு, அங்கு சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஆலய வழிபாடுகளுக்கு பல்வேறு தடைகள் மற்றும் நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், ஆலய நிர்வாகத்தினரின் வழிநடத்தலிலும் பக்தர்களின் ஒத்துழைப்புடனும் தற்போது ஆலயத்தில் வழமையான வழிபாடுகளும் சமய நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.





