தமிழர் அரசியலும் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நிராகரித்த புதிய அரசும்
பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான பணிகளால் வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் களம் கடந்த மூன்று வாரங்களும் சூடுபிடித்திருந்தது.
புதிய கூட்டணிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் மூலம் புதிய வேட்பாளர்களின் வெளிப்பாடுகள், வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், நீண்டகாலமாக அரசியலை பற்றிப்பிடித்துக் கொண்டிருந்த பலம்வாய்ந்த அரசியல்வாதிகள் பல காரணங்களால் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றமை தொடர்பில் வடக்கில் மற்றும் தெற்கில் பிரசுரமாகும் பத்திரிகை பக்கங்கள் நிரம்ப செய்தி அறிக்கைகள் வெளியாகின.
தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள்
வேட்பாளர் பெயர் பட்டியலைத் தயாரிக்க ஆரம்பித்ததிலிருந்து குழப்பமான நிலைமை உருவாக ஆரம்பமானது. வடக்கு தமிழ் அரசியல் களத்தில் ஆழமான நெருக்கடி உருவாகக் பிரதான காரணமாக அமைந்த குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் குறித்த கட்சியிலிருந்து வெளியேறியமையை குறிப்பிட முடியும்.
மேலும், தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள், பாரம்பரிய தமிழ்த் தலைமைகளை நிராகரித்துப் புதிய அரசியல் முகங்களை எதிர்பார்த்தல், தமிழ் கட்சிகள் வெவ்வேறாகத் தேர்தலில் போட்டி இடுகின்றமை போன்ற காரணங்களால் பலமான தமிழ் மக்களின் ஆணையை குறித்த தமிழ் கட்சிகளுக்குப் பெற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்வி தமிழ் அரசியலை சற்று சிந்தித்து பார்க்க வைத்துள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளிடையே ஒற்றுமையின்மையால் ஏற்படக்கூடிய அரசியல் வீழ்ச்சிபற்றிய குழப்பமும் கவலையும் தமிழ் செய்தித்தாள்களின் பக்கங்களில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது.
இலங்கை தமிழரசு கட்சியில் (ITAK) ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாகக் ஏறக்குறைய அனைத்து தமிழ் நாளிதழிலும் பல்வேறு வகையில் செய்திகள் வெளியாகின. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளதாகக் கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி காலைக்கதிர் பத்திரிகையின் முதற்பக்கத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் தெரிவிக்குழு
மேலும், மரணமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தமிழரசு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் பெயர் இடம்பெறாததால் அக்கட்சியிலிருந்து விலகி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து (DTNA) யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அதே அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாவை சேனாதிராஜாவின் இந்த முடிவிற்கான காரணம் அவரது அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை எனவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் தனது விருப்பத்திற்கு ஏற்பக் கட்சியைக் கையாண்டதன் மூலம் ஏற்பட்ட விரக்தியே சசிகலா ரவிராஜின் இராஜினாமாவிற்கான காரணம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே நாளில் புதிய சுதந்திரன் நாளிதழிலும் சசிகலா ரவிராஜ் தமிழரசு கட்சியிலிருந்து விலகி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்ததாக முதல் பக்கத்தில் செய்தி வெளியானது.
அன்றைய தினம் ஈழநாடு நாளிதழில் முதல் பக்கத்தில் தமிழ் அரசு கட்சியின் பொறுப்புகளிலிருந்து மாவை சேனாதிராஜா விலகுவதாகச் செய்தி வெளியாகியதுடன் குறித்த தீர்மானத்திற்கு காரணமாகக் அமைந்த விடயமாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் தெரிவிக்குழுவை நியமிக்கும்போது மாவை சேனாதிராஜாவிற்கு தெரியாமல் மேற்கொண்டமையாகும்.
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி
எனவே ம.ஆ சுமந்திரன் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதால் சேனாதிராஜா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததாகக் குறித்த அறிக்கையில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தனக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பைச் சிவஞானம் சிறீதரன் அல்லது சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஏற்க வேண்டும் எனவும் சேனாதிராஜா அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே உள்ளடக்கத்துடன் அக்டோபர் 8ஆம் திகதி தினகரன், தினக்குரல் மற்றும் தமிழன் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. (சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா எழுதிய கடிதத்தின் பிரகாரம், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு சிவஞானம் சிறீதரனை மாவை கேட்டுக் கொண்டார்)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து மாவை சேனாதிராஜா விலகியமை தொடர்பில் செய்தி வெளியிட்ட பல பத்திரிகைகள் அக்கட்சியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ம.ஆ.சுமந்திரனின் செயற்பாடுகளை விமர்சித்துச் செய்தி அறிக்கையிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசு கட்சியில் ம.ஆ.சுமந்திரன் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாகவும், அவரது விருப்பப்படியே வேட்பாளர் பட்டியலில் பெண்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அக்டோபர் 8ஆம் திகதி காலைமுரசு நாளிதழின் மூன்றாவது பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பற்றிய விரிவான செய்தி அக்டோபர் 9ம் திகதி தினக்குரல் நாளிதழின் ஒன்பதாம் பக்கத்தில் வெளியானது.
கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த பெண்கள் அதிருப்தி தெரிவித்ததோடு, ம.ஆ.சுமந்திரனின் செயற்பாடுகளையும் விமர்சித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ம.ஆ.சுமந்திரன் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகியிருந்த மாவை சேனாதிராஜா, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு சிவஞானம் ஸ்ரீதரனுக்கு கடிதம்மூலம் தெரிவித்ததாக அக்டோபர் 08 ஆம் திகதி காலைமுரசு மற்றும் ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சித் தலைமை ம.ஆ.சுமந்திரனின் தற்போதைய நடத்தையை மாவை சேனாதிராஜா கண்டிப்பது மட்டுமன்றி, சுமந்திரன் கட்சித் தலைமைக்கு வந்துவிடுவாரோ என்ற அச்சத்திலும் உள்ளார் என்பது தெளிவான விடயமாகும்.
இலங்கை தமிழரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைகுறித்து வடக்கின் தமிழ்ப் பத்திரிகைகளின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும், ஆனால் தெற்கில் உள்ள சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் சற்றே தெளிவற்ற மற்றும் சிக்கலான முறையில் செய்தி வெளியிட்டிருந்தன.
மாவை சேனாதிராஜாவின் இராஜினாமா, சிவஞானம் ஸ்ரீதரனுக்கு கட்சித் தலைமைப் பதவி வழங்குமாறு மாவை விடுத்த கோரிக்கை போன்ற நிகழ்வுகள் தென்னிலங்கைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்த போதும் ம.ஆ.சுமந்திரனின் செயற்பாடுகள் தொடர்பில் பெரும்பாலான செய்திகளில் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் மவ்பிம நாளிதழில் வெளியான இரு செய்தி அறிக்கைகளில் ம.ஆ.சுமந்திரனின் அரசியல் நடவடிக்கைகள்குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பும் உள்ளடக்கம் பொதிந்திருந்தமை காணக்கூடியதாக இருந்தது.
கடந்த ஒக்டோபர் மாதம் 8ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் அக நெருக்கடிகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளில், அந்த நெருக்கடிகளுக்கு ம.ஆ.சுமந்திரனின் தன்னிச்சையான நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என்று சுருக்கமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் ஒக்டோபர் 15ஆம் திகதி தினமின, டெய்லி மிரர் ஆகிய பத்திரிக்கைகளில் மாவை சேனாதிராஜா கட்சியின் பதவிகளை இராஜினாமா செய்ததாகச் செய்திகளை வெளியிட்டிருந்த போதிலும் அந்தத் தீர்மானத்திற்கான காரணமாக அமைந்த ம.ஆ.சுமந்திரனின் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவித தகவலும் உள்ளடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய ஊழல் அரசியல்
கடந்த அக்டோபர் 13ம் திகதி மவ்பிம நாளிதழின் முதல் பக்கத்தில் "தலைமைத்துவ கோஷ்டி பூசல்களால் தமிழர்களுக்கு ஆபத்து" என்ற தலைப்பில் செய்தி வெளியானது. ஒற்றுமையின்மையால் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தமிழரசு கட்சியின் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் ம.ஆ.சுமந்திரனின் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகைகளில் அறிக்கையிட்டிருந்ததை போன்று இங்குக் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தென்னிலங்கை அரசியலில் பிரபல்யம் பெற்ற ம.ஆ.சுமந்திரன் தமிழ் அரசியலில் அதிகம் விரும்பப்படாத தலைவர் என்பதனை வடக்கை மையமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் தமிழ் பத்திரிகைகளை ஆய்வு செய்தபோது புரிந்துகொள்ள முடியுமாக இருந்தது.
அத்துடன் ம.ஆ.சுமந்திரன் தென்னிலங்கையின் பிரதான நீரோட்ட அரசியல்வாதியின் விருப்பத்திற்கேற்ப அரசியல் செய்யும் ஒரு தமிழ் அரசியல்வாதியே தவிர, வடக்கில் உள்ள தமிழ் மக்களின் இலக்குகளுக்காக உண்மையான முறையில் அரசியல் மேற்கொள்ளும் நபரா என்ற பிரச்சினை இங்கு எழுகின்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நிலவி வரும் உள்ளக பூசல்கள் குறித்து செய்திகள் வெளிவந்த அதேவேளை, கடந்த வாரம் தமிழ் பத்திரிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த மற்றொரு குறிப்பிட்ட விவகாரமும் காணப்பட்டது. அதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன், நாடு முழுவதும் ஊழல் நிறைந்த பாரம்பரிய மேட்டுக்குடி அரசியலுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டது.
இதன் விளைவாகத் தமிழ் மக்களும் குறிப்பாக இளைஞர் சமூகம் பாரம்பரிய ஊழல் அரசியலை நிராகரிக்கும் போக்கே காணப்படுகின்றது. இதன் விளைவாக, தமிழ் சமூகம் ஒரு வித்தியாசமான அரசியலைக் கோருகிறது, தற்போதுள்ள பாரம்பரிய அரசியலால் தமிழ் இளைஞர் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய இயலாமை, மற்றும் தமிழ் கட்சிகளுக்கு இடையிலான கருத்தியல் மோதல்கள் மற்றும் முரண்பாடுகள் காரணமாகப் பின்னடைவை சந்தித்துள்ள தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம் வீழ்ச்சியடையும் என்ற அச்சமும் கவலையும் பல தமிழ்ப் பத்திரிகைகளின் பக்கங்களில் தெளிவாகக் கண்டுகொள்ள முடியுமாக இருந்தது.
தமிழ் மக்களின் அபிலாஷை
கடந்த ஒக்டோபர் 8-ம் திகதி ஈழநாடு நாளிதழில் 4-வது பக்கத்தில் ‘அரசியலில் பழையவர்கள்’ என்ற தலைப்பில் கருத்துக் கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது. தமிழ் அரசியலுக்கு தமிழ் தேசியவாதம் அவசியம் ஆனால் அது புதிய அணுகுமுறைகளுடன் தொடர வேண்டும் என்று இந்தக் கட்டுரை கூறுகின்றது. எனவே ஏற்கனவே அரசியலில் இருக்கும் அனுபவசாலிகளின் அரசியல் மக்களுக்குப் பிடிக்காததால் புதியவர்களுக்கு இடம் கொடுத்துப் புதிய அரசியல் அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என அங்கு மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிலைநாட்டக்கூடிய பலமான சக்தியை உருவாக்குவதற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பது பொதுத் தேர்தல் தொடர்பில் பேசப்பட்ட பிரதான விடயமாகும். ஆனால் தமிழ் கட்சிகளுக்குள் அவ்வாறான இணக்கம் தென்படவில்லை. அதைப் பற்றிய கவலை மற்றும் ஏமாற்றம் செய்தித்தாள்களின் பக்கங்களில் நன்றாகப் பிரதிபலிக்கிறது.
“தமிழ்த் தேசியத்திற்காக செயற்படும் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை மிகவும் முக்கியமானது. கட்சிகளுக்கு இடையே நல்லிணக்கம் என்பது கருத்தியலின் அடிப்படையிலேயே இருக்க வேண்டுமே தவிர தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி என்ற பெயரில் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கட்சி ஒற்றுமை ஒன்றே தேர்தலில் வெற்றிபெற வழியென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் நாடாளுமன்ற ஆசன போட்டி காரணமாகக் கட்சிகளிடையே பலத்த ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளது. பதவிகளுக்காக அல்லாமல் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகச் செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு இம்முறை மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும்." என அக்டோபர் 8ஆம் திகதி காலைக்கதிர் நாளிதழின் நான்காவது பக்கத்தில் வெளியான கட்டுரையில் இப்படியொரு கருத்து வெளியாகி உள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்த கருத்து ஒன்று கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி காலைக்கதிர் பத்திரிகையின் முதற்பக்கத்தில் வெளியானது. தமிழ் கட்சிகள் தமது அரசியல் இலக்குகளை ஒதுக்கி வைத்துவிட்டு தமது சுயலாபங்களுக்காக வடக்கில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி தினகரன் நாளிதழின் எட்டாவது பக்கத்தில் தமிழ்க் கட்சிகளின் இணக்கமின்மை குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் தலைப்பு, 'ஓரணியில் ஒன்றுபட முடியாததால் சிதறுண்டு போன தமிழ்கட்சிகள்'. தமிழ் அரசியல் கட்சிகள் தமது சொந்த இலக்குகளுக்காகச் செயற்படுவதால், சுயநலவாத தமிழ் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் இம்முறை தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறாகத் தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்குறித்து கவலை தெரிவிக்கும் பல செய்திகள் தமிழ் நாளிதழ்களில் அதிகளவில் வெளியாகியிருந்த போதிலும் தென்னிலங்கை சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் வடக்கின் தமிழ் அரசியலின் நிகழ்வுகளை அதிகம் கவனத்தில்கொள்ளவில்லை.
ஏனெனில், தங்களின் சொந்த நலனுக்காக அரசியல் கட்சி தாவல்கள், கட்சிப் பிளவுகள், தங்கள் அதிகாரத் தேவைகளுக்காகக் கூட்டணி அமைப்பது போன்ற நிகழ்வுகள் தென்னிலங்கையில் சாதாரண விடயம் என்பதனால் வடக்கின் அரசியலின் இயக்கவியல் தொடர்பில் தென்னிலங்கை பத்திரிகைகள் அவ்வளவு கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகள் செல்வாக்கு செலுத்தினாலும் கூட, மாவட்ட மட்டத்தில் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் தெரிவு செய்யப்படும் பொதுத் தேர்தலில், தமிழ் வாக்காளர் எந்த வேட்பாளரைத் தெரிவு செய்கின்றார் என்பது தொடர்பில் தென்னிலங்கை சிங்கள சமூகம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அதனால் தென்னிலங்கை ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளைத் தவறவிட்டிருக்கலாம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை புதிய அரசாங்கம் நிராகரித்தது
ஒக்டோபர் 9ஆம் திகதி, நாம் ஆய்விற்கு உட்படுத்திய பெரும்பாலான தமிழ் நாளிதழ்களின் முதற்பக்கத்தில் அறிக்கையிட தவறவிடாத ஒரு செய்தி காணப்பட்டது. அது இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை கடந்த அரசாங்கங்களைப் போன்று புதிய அரசாங்கமும் நிராகரித்தமை குறித்ததாகவும்.
இதன்படி, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தைத் தொடர்ந்து எதிர்ப்பதுடன், வெளி சாட்சிய சேகரிப்பு பொறிமுறையின் அதிகாரங்களை நீட்டிக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் உடன்படப் போவதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், இந்தப் பிரேரணை நிராகரிக்கப்பட்ட போதிலும், நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகளை உள்நாட்டு பொறிமுறையினூடாகக் கையாள்வதில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்தச் செய்தி உள்ளடக்கம் கொண்ட அறிக்கைகள் அக்டோபர் 9ஆம் திகதி காலைக்கதிர், ஈழநாடு, தமிழ்மிரர், தினக்குரல் போன்ற நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பிரதான செய்தியாக வெளியிடப்பட்டிருந்தன.
இலங்கைத்தீவு முழுவதிலும் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான ஜெனீவா தீர்மானங்களை அரசாங்கம் நிராகரித்ததாக வெறும் அறிக்கைகள் வெளியிடுவதற்கு அப்பால் தமிழ் மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் பல கட்டுரைகளும் அன்றைய தமிழ் நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டன.
காலைக்கதிர் நாளிதழின் நான்காம் பக்கத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கமான கருத்து பின்வருமாறு:
“வடக்கின் போலி தேசியவாத, ஊழல் அரசியல் காரணமாகத் தமிழ் மக்களின் அதிருப்தி போன்ற காரணங்களால் வடக்கு, கிழக்கு தமிழ் இளைஞர்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், முன்னைய அரசாங்கங்களைப் போலவே மனித உரிமை மீறல் தொடர்பான புதிய அரசாங்கத்தின் தீர்மானமும் அந்த நம்பிக்கையைப் பலவீனப்படுத்தும் செயலாகவே தமிழ் சமூகம் கருதுகின்றது. தமிழர் பிரச்சினைகளில் முன்னைய அரசாங்கங்களின் நடைமுறைகளைப் பின்பற்றித் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணைகளைத் தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது."
கடந்த அக்டோபர் 9ஆம் திகதி ஈழநாடு நாளிதழில் நான்காவது பக்கத்தில் "அநுரவிடமிருந்து நீதி" என்ற தலைப்பில் கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் பின்புலம் குறித்து விமர்சித்து, உள்நாட்டு பொறிமுறையினூடாக மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தமையானது ராஜபக்ச அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைக்கு நிகரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதியை எதிர்பார்க்க முடியாது என மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் டெய்லி நியூஸ், தினமின, தி ஐலண்ட் ஆகிய பத்திரிகைகள் மாத்திரமே மேலே கூறப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்மொழிவுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்தன. மேல் குறித்த மூன்று அறிக்கைகளும், குறித்த நிகழ்வைச் செய்தியாக முன்வைப்பதற்கு மாறாக, அதன் உள்ளடக்கம் முக்கியமாக அரசாங்கம் அந்த முடிவை எடுக்க வழிவகுத்த காரணங்களை நியாயப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவைகள் உறுதிப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஆட்சியில் உள்நாட்டு பொறிமுறை மூலமாக நீதி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும் அதேவேளை மனித உரிமைகள் மற்றும் ஜனாநாயகம் பாதுகாக்கப்படும் எனத் தற்போதைய ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருனாதிலக குறிப்பிட்டதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.
பொதுத் தேர்தலை முன்னிட்டு அரங்கேறிக்கொண்டிருக்கும் நாடகத்தின் மத்தியில் , இந்தச் சம்பவம் தெற்கில் உள்ள வாசகருக்கு ஒரு முக்கிய செய்தியாக இருக்க வாய்ப்பில்லை, அதனால்தான் தெற்கில் உள்ள மூன்று பத்திரிகைகளில் மாத்திரம் இந்தச் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெரும் இனப்படுகொலைக்கு ஆளான வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவது முக்கியமானது. தென்னிலங்கையில் உள்ள ஒருசில சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் இந்தச் சம்பவத்தைச் செய்தியாக அறிக்கையிட்டு இருப்பதற்கு மேலதிகமாக அரசாங்கத்தின் தீர்மானத்தை நியாயப்படுத்த முயற்சிப்பதானது வடக்கின் தமிழ் சமூகத்தின் கடுமையான எதிர்ப்பிற்கு பதிலளிக்கும் செயற்பாடாக மட்டுமே ஆகும்.
(வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்ட மலையக மக்கள் உட்பட விளிம்புநிலை மக்களின் கோரிக்கைகள் மற்றும் உரிமைகள்குறித்து வடக்கு மற்றும் தெற்கின் அரசியல் மேடைகளில் தென்பட்ட உரையாடல்கள் மற்றும் கருத்துக்கள் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பது பற்றிய ஆய்வின் ஒன்பதாவது தொகுப்பாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது. இந்தக் கட்டுரைக்கு ஒக்டோபர் எட்டாம் திகதி முதல் பதினான்காம் திகதி வரையிலான காலப்பகுதியில் மூன்று மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி நாளிதழ்களின் பிரசுரமான செய்திகளின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது.)
கட்டுரை - சுபாஷினி சதுரிகா
மொழிபெயர்ப்பு - ரிக்சா இன்பாஸ்
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 30 October, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.