யாழில் பொலிஸாரால் விசேட சுற்றுக்காவல் நடவடிக்கை
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டத்தினை மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கினை மீறி பொது மக்கள் வீதிகளில் பயணிப்பதோடு, வீதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதனால் கோவிட் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
இதனைத் தடுக்கும் முகமாக இன்று காலை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸாரினால் விசேட சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீதியில் பயணித்த மற்றும் ஊரடங்கு வேளையில் வீதிகளில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவோரது விபரங்கள் பொலிஸாரால் சேகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ். நகரிலும் இராணுவத்தினர் இவ்வாறான சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



