வெசாக் தன்சல் ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் தன்சல்களை பதிவு செய்வதற்கு தொடர்ந்து சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாடு முழுவதும் சுமார் 15,000 தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார முறை பின்பற்றுதல்
குறிப்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று நோய்கள் சில பரவி வருவதால், தன்சல்களை ஏற்பாடு செய்பவர்கள் உரிய சுகாதார முறைகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, தானசாலைகளை ஏற்பாடு செய்யும்போது, சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களின் உதவியை நாட வேண்டும் என்று தொற்றுநோயியல் நிறுவனத்தின் சமூக மருத்துவ நிபுணர் திலங்கா ருவன் பத்திரானாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூளைக்காய்ச்சல் வைரஸ் பரவல் காரணமாக தானசாலைகளை ஏற்பாடு செய்யும்போது, இந்த நேரத்தில் குளிர்பான தானசாலைகளை நடத்தாமல் இருப்பது நல்லது என்றும் மூளைக்காய்ச்சல் வைரஸ் நீர் மூலம் பரவக்கூடும் என்றும், முடிந்தவரை காய்ச்சிய நீரையே அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மருத்துவர்களின் அறிவுறுத்தல்
எனவே, மக்கள் குளிர்பான தானசாலைகளை ஏற்பாடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

மேலும், சாலட் போன்ற பச்சையான உணவுகளைச் சேர்க்கக்கூடாது என்றும், உணவு சமைக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் உண்ணப்பட வேண்டும் என்றும், இது மூளை அழற்சி நோய் பரவுவதைத் தடுக்க உதவும் என்றும் கூறப்படுகின்றது.
உணவு சமைப்பவர்களும் பரிமாறுபவர்களும் அதிக சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.