போதைப்பொருள் ஆராய்வு தொடர்பில் விசேட கூட்டம் - விஜயதாச ராஜபக்ச (video)
வடக்கில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று (31.10.2022) நீதி அமைச்சின் பங்கு பற்றுதலோடு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
நேற்று (30.10.2022) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நீதி அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றும் நாளையும் வடக்கில் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் வேறு சில அமைச்சுகளும் பங்கேற்கபோகும் நடமாடும் சேவையினை நடாத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஷேட நடமாடும் சேவை
வடக்கு மாகாண மக்களுக்காகவும் குறிப்பாக இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு வருகை தந்துள்ள மக்கள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாகவும் இந்த நடுமாடும் சேவையினை ஒழுங்குப்படுத்தி இருக்கின்றோம்.
அதாவது இந்தியாவிலிருந்து வந்த மக்கள் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ் ஆள் அடையாள அட்டை மற்றும் மேலும் பல முக்கிய ஆவணங்களை பெறுவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பில் கரிசனை செலுத்துவதற்காகவும், அதேபோல தங்களுடைய சொந்த காணிகளை மீளப்பெறுவதற்கான ஒழுங்கு முறைகளை ஏற்படுத்துவதற்காகவே இந்த நடமாட சேவையினை நாங்கள் முக்கியமாக ஏற்படுத்தி உள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் ஒருநாளும், மறுநாள் கிளிநொச்சியிலுமாக இரண்டு நாட்கள் நடுமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் விநியோகம்
போதைப்பொருள் என்பது ஒரு சமூகம் பிரச்சினையாக மாறிவிட்டது எனவே அதனை
கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் அதிகளவில் இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனை கட்டுப்படுத்த ஒரு விசேட அணி ஒன்றினை உருவாக்கி அந்த அணியின் மூலம் வடபகுதியில் எவ்வாறு போதைப்பொருள் விநியோகிக்கப்படுகின்றது எனவும் போதைப்பொருள் விநியோகத்தர்கள் யார்? அவர்களுக்கு எவ்வாறு போதை பொருள் கிடைக்கின்றது.
எங்கிருந்து வடபகுதிக்கு போதைப்பொருள் கொண்டுவரப்படுகின்றது போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து வடபகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பிரச்சினைகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் விடயம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோர் இணைந்து ஒரு அணி ஒன்றினை உருவாக்கி வட பகுதியில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து போதைப்பொருள் பாவனையை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயவுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை யாழ்ப்பாணத்தில் வழங்கி வைத்தார்.
நேற்று மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து - பௌத்த கலாசார பேரவையில் இடம்பெற்ற நிகழ்விலேயே சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இரண்டாம் மொழி கற்கை நெறி நிலையத்தின் இயக்குனர் எம்.ரி.எஸ். இராமச்சந்திரன், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஈ.எம்.யு.யு.குணரத்ன, யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உயித் லியனகே, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நடமாடும் சேவை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று (30.10.2022) பிற்பகல் 3 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பில், முன்னாயத்த கலந்துரையாடலில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, மேலதிக செயலாளர் சமன் குமாரி, மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என். கமலராஜன், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் கே.கமலரூபன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சத்தியமூர்த்தி மற்றும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
குறித்த நடமாடும் சேவை இன்றைய தினம் (31.10.2022) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.