மன்னாரில் தற்போதைய நிலை குறித்து இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலைக்கு மத்தியில் மன்னாரின் தற்போதைய நிலைமை குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (27) காலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற மையினால் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரத்து 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில் சுமார் 2100 நபர்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன் ஆயத்த நடவடிக்கைகள்
தொடர்ந்தும் மழை பெய்து வருகின்ற மையினால் மன்னார் மாவட்டத்தில் இடம்பெயரும் மக்களின் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன், அனர்த்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன் ஆயத்தம் குறித்தும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் ஆராயப்பட்டது.
தொடர்ந்தும் மழை பெய்து கொண்டு இருக்கின்றமையினால் அனுராதபுரம் மற்றும் மல்வத்து ஓயாவில் இருந்தும் கூடுதலான நீர் வந்து கொண்டு இருக்கின்றமையினால் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் சகல திணைக்களம், முப்படையினர் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கோரியுள்ளார்.
இதன் போது மாவட்டத்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்களை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாடு செய்த குறித்த அவசர கலந்துரையாடல் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகம், இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படை, பொலிஸ் உயர் அதிகாரிகள், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |