நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமாருக்கும் சிறீதரனுக்கும் இடையே விசேட சந்திப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
சந்திப்பொன்று நேற்று (01) மாலை 3.30 மணியளவில் சிறீதரனின் இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனை இலக்காகக்கொண்டு அடுத்தகட்டமாக முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய கட்சிகள்
அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, இனிவருங்காலங்களிலேனும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுப் பயணிக்க வேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவை அடிப்படையாகக்கொண்டு ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அண்மையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இத்தீர்வுத்திட்ட முன்மொழிவு குறித்தும், அதற்கு அப்பாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
கொள்கை ரீதியான நிலைப்பாடு
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான குறித்த சிநேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனை இலக்காகக்கொண்டு அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருதரப்பினரும் ஆராய்ந்தனர்.
அதேபோன்று தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை கஜேந்திரகுமார் சிறீதரனிடம் கையளித்தார். அத்தோடு ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் பற்றி இதன்போது சிறீதரன் எடுத்துரைத்தார்.
அது மாத்திரமன்றி, தமிழர்களுக்கான தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகவேண்டும் என்ற கொள்கை ரீதியான நிலைப்பாடு தொடர்பில் இங்கு இருதரப்பினரும் தமது இணக்கத்தை வெளிப்படுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |