முல்லைத்தீவில் 2026ஆம் ஆண்டின் புதிய சட்ட வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல்
இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக அடிப்படையிலான அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் செயற்பாடுகளை பாதிக்கக்கூடிய வகையில் முன்மொழியப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டின் புதிய சட்ட வரைபு தொடர்பான கலந்துரையாடல் நடைப்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல்களானது அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளன.
புதிய சட்ட வரைபு
இந்தக் கலந்துரையாடல்களில், சிவில் செயற்பாடுகளின் மீது அரசுக்கு அளப்பரிய அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைபு தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டத்தின் சாத்தியமான தாக்கங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்புகள் சிவில் சமூக தளத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமன்றி கிராம மட்டங்களில் செயற்படும் கிராம அபிவிருத்தி சங்கங்கள், சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களும் இந்தச் சட்டத்தின் தாக்கத்திற்கு உட்படக்கூடிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சமூக அமைப்புக்கள் அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படுவதன் மூலம் அவற்றின் சுயாதீன செயற்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் பங்கேற்பாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

சட்டத்தை இவ்வாறு அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கான காரணம் என்ன என்பதில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதுடன், இதன் பின்னணியில் சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




