அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கையில் சில முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்கள் ரீதியில் செயற்படுத்துவதன் ஊடாக அதிக அரச ஊழியர்கள் கொழும்பிற்கு வருவதை குறைக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் அரச சேவை தொடர்பில் விசேட ஆய்வொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போதே குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான அரச சேவை
அத்துடன், குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான அரச சேவையினை பெற்றுக் கொடுத்து சேவை திருப்தியை அதிகரிக்கும் வண்ணம் இந்த ஆய்வை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்போது அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
அரச ஊழியர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை
அரச ஊழியர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை விரைவுபடுத்தவும், அரச ஊழியர்களிடம் அதிகபட்ச சேவையினை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இந்த சந்தர்ப்பதில் ஆராயப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சில அரச நிறுவனங்களை ஒன்றிணைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.