மட்டக்களப்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான இரவு சேவை பேருந்துகளில் விசேட சோதனை
மட்டக்களப்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இரவு சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை நேற்று (18.07.2023) இரவு மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி இரவில் பயணிக்கும் பேருந்துகளை கண்டறியும் விசேட நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மற்றும் மாவட்டத்துக்குள் நுழையும் 11 பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீதி போக்கவரத்து சட்டத்தை மீறிய பேருந்துகளுக்கு எச்சரிக்கை
இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கை இரவு 11 மணிவரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போக்குவரத்து அனுமதிப் பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் உட்பட போக்குவரத்து சேவைக்கான அனைத்து அனுமதி பத்திரங்களும் சோதனையிடப்பட்டு பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது.
அத்துடன் வீதி போக்குவரத்து சட்டத்தை மீறி பயணித்த பேருந்துகள் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், எந்தவிதமான ஆவணங்களும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய ஒருவரின் மோட்டர்சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |