தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று முதல் 20 ஆம் திகதி வரை தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தையை மையமாகக் கொண்டு பயணிகளுக்கான பேருந்து போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹட்டன்–பதுளை மற்றும் வவுனியா–யாழ்ப்பாணம் போன்ற அதிக பயணிகள் போக்குவரத்து செய்யும் பாதைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாதைகளுக்கு அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள பேருந்துகள் முழு கொள்ளளவுடன் இயக்கப்படு வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதியுடன் இயங்கும் பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கு ஏற்ற வகையில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றுக்கான தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் பஸ்டியன் மாவத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அலுவலகத்தில் வழங்கப்படும் எனவும், இதற்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட வார இறுதி முடிந்த பின் கொழும்பு திரும்பும் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதிக பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கான மாகாண போக்குவரத்து அதிகாரசபைகளுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்களின் கீழ் பேருந்துகளை இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தேவையான தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே மாகாண போக்குவரத்து ஆணையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நீண்ட வார இறுதி காலத்தில் பேருந்து நிலையங்களில் மேற்பார்வைக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும் பணியமர்த்தப்படவுள்ளனர்.
1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயல்படும் எனவும், நடமாடும் ஆய்வுக் குழுக்கள் தொடர்ந்து வீதிகளில் கண்காணிப்பை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது.



