உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க விசேட ஏற்பாடுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க, வாக்குச் சாவடிப் பொறுப்பதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வாக்களிப்பு
அதன் பிரகாரம் ஓரளவுக்கு கண்பார்வை மங்கிய அல்லது கண்பார்வையற்ற நபர்கள் தங்கள் வாக்குகளை சுயமாக செலுத்தும் வகையில் வாக்குச்சீட்டின் மீது தொட்டுணரக்கூடிய ஸ்டென்சில் சட்டகம் (Tactile stenccil Frame) ஒன்றைப் பயன்படுத்தும் வசதி அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் போன்ற கருவிகளின் துணையுடன் வரும் நபர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் இலகுவாகப் பிரவேசிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலியில் வருகை தரும் நபர்கள் மற்றும் உயரம் குறைந்தவர்கள் இலகுவாக வாக்களிக்கும் வகையில் வாக்குப் பெட்டியை குறைவான உயரத்தில் வைக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட ஏற்பாடுகள்
அத்துடன் பார்வைக்குறைபாடு கொண்டவர்கள் கண்ணாடி அல்லது லென்ஸ் பயன்படுத்தி வாக்களிக்க விரும்பினால் அதற்கும் வசதி செய்து கொடுக்குமாறும் குறித்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையானது வாக்களிப்பவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளும் படியும் வாக்குச் சாவடி பொறுப்பதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
