கண்ணீரால் சொல்ல முடியாத வலி..! சபையில் மிகுந்த கவலையோடு பேசிய ஜனாதிபதி அநுர
update - 05:38pm
கண்ணீரால் கூட சொல்ல முடியாத வேதனையை இலங்கையர்கள் அனுபவித்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் அமர்வில் உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் நாடு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பலர் உயிரை இழந்திருக்கின்றார்கள். பலர் காணாமல் போயிருக்கின்றார்கள்.
இது மிகுந்த கவலைக்குரிய விடயம். உயிரிழந்தவர்களை திருப்பி தருவது என்ப இயலாதது. அதைவிட காணாமல் போனோரை எண்ணி, அவர்களது குடும்பத்தார் என்றாவது வருவார்கள் என்று தினம் தினம் வலியோடு கடக்க வேண்டிய நிலை இருக்கும்.
இதனை நாங்கள் கடந்த கால யுத்தத்தின் போது அதிகமாக உணர்ந்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனர்த்தத்தின் போது இலங்கை மக்களின் முழுமையான மனிதாபிமானத்தை நாங்கள் கண்டிருக்கின்றோம். எந்தவொரு அனர்த்தத்தினாலும் வீழ்த்த முடியதாத உறுதியான மனிதாபிமானத்தை நாங்கள் கண்டிருக்கின்றோம்.
எமது நாட்டின் சிறு பிள்ளைகள் தாங்கள் சேர்த்து வைத்த சிறு உண்டியலில் இருக்கும் பணத்தை நிவாரணப் பணிகளுக்காக கொடுத்திருக்கின்றனர். எமது நாட்டில் ஒரு தந்தை தன்னுடைய தோட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு வாழைக் குழையை நிவாரணமாக கொடுக்கத் தயாராக இருந்தார். இப்படி உறுதியான மனிதாபிமானமுடைய மக்களை எமது நாடு கொண்டிருக்கின்றது.
அதேசமயம், வெளிநாட்டில் இருக்கும் எமது இலங்கையர்கள் இரவு பகல் பாராது உழைத்து எமது தாய் நாட்டிற்காக பணி செய்கின்றனர்.
இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை என்று அறிவித்த போது, கேட்டதை விட பல மடங்கு இரத்ததானம் செய்தனர் எமது மக்கள். அழித்துவிட முடியாத உறுதியான மனிதாபிமானம் எம்மிடம் உள்ளது என்பதை எம்மக்கள் நிரூபித்தனர்.
ஆனால், நான் கண்டிருந்தேன் சில நபர்கள் அந்த மனிதாபிமானத்தை கேலிக்குட்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தனர்.
கலாவேவ பகுதியில் வெள்ளத்தில் பேருந்தொன்று அடித்துச் செல்லப்பட்ட பிறகு அவர்களை காப்பாற்ற எமது படையினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால், முகப்புத்தகத்தில் விமர்சிக்கும் பலர் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒரு முறை, இப்போது ஒரு மணித்தியாலம், இப்போது இரு மணித்தியாலம், இப்போது மூன்று மணித்தியாலம் என்று மீட்பு பணியை கேலிக்குட்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அப்போதும் எமது தாய் நாட்டின் படையினர் மீட்பு பணியை விடாது தொடர்ந்து அவர்களை மீட்டெடுத்தனர்.
துணிகரமான நடவடிக்கைகளை அப்போது கடற்படையினர் மேற்கொண்டு பேருந்தில் இருந்த அனைவரையும் ஒரு வீட்டின் கூரை மீது ஏற்றி காப்பாற்றினர்.
மாவிலாறு அணை உடைப்பெடுக்கப் போவதாக அதிகாலை 3 மணிக்கு தகவல் வந்தது. உடனடியாக செயற்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.
அப்போது, இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் உள்ளிட்ட எமது படையினர் விரைவாக செயற்பட்டு வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்களை எழுப்பி, சேருவில பௌத்த விகாரைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.
விகாரை உயர்வான பிரதேசத்தில் இருந்ததன் காரணமாக, அங்கு ஆயிரக்கணக்கானவர்களை எம்மால் பாதுகாப்பாக தங்க வைக்க முடிந்தது.
புதிய இணைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நடைபெற்று வருகின்றது.
மக்களுக்கான செய்தி
இந்த நிலையில், இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 05.00 மணிக்கு ஜனாதிபதியின் குறித்த அறிவிப்பு வெளிவரும்.