இலங்கையின் பிரதிநிதியாக எகிப்து சென்றுள்ள மாலைதீவு சபாநாயகர்
எகிப்து நாட்டின் ஷாம் எல் ஷெயிக்கில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சென்றுள்ளமை சர்வதேச ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் தகுதியானவர்கள் இல்லையா?

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இது சம்பந்தமாக இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதுடன் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டில் கலந்துக்கொள்ளக்கூடிய தகுதியான நபர் நாடாளுமன்றத்தில் இல்லையா எனவும் அவர் வினவியுள்ளார்.
மாலைதீவு சட்டமா அதிபர் விமர்சனம்

இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்களில் தீவிரமாக பேசப்படுகிறது. மாலைதீவு சபாநாயகர், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளமை குறித்து அந்நாட்டு சட்டமா அதிபர் கலாநிதி மொஹமட் முனவ்வர் முதலில் விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.
சபாநாயகராக நஷீட் மாலைதீவு மக்களால் பராமரிக்கப்படும் வேளையில் மற்றுமொரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்து அவர் கேள்வியை முன்வைத்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பாக மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக நஷீட் கடந்த வெள்ளி கிழமை புறப்பட்டுச் சென்றார்.
அவரது விஜயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட மாலைதீவு நாடாளுமன்றம், அவர் இலங்கை தூதுக்குழுவின் பிரதிநிதியாக மாநாட்டில் கலந்துக்கொள்வதாக தெரிவித்திருந்தது.
ஜனாதிபதியின் ஆலோசகராக மாலைதீவு சபாநாயகர் எகிப்து சென்றுள்ளார்

அதேவேளை மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக மாலைதீவு அரசாங்கத்தின் சார்பில் உப ஜனாதிபதி பைசல் காசிம் தலைமையிலான குழு கடந்த வெள்ளிக்கிழமை எகிப்து புறப்பட்டுச் சென்றது.
இந்த மாநாடு நவம்பர் 6 ஆம் திகதியில் இருந்து 18 ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறுகிறது. இலங்கை ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஆலோசகராக மாலைதீவு சபாநாயகர் மாநாட்டில் கலந்துக்கொள்வதாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிக்கையில் கூறியிருந்தது.