எமது உறவுகளுக்கு நீதி கோரியே சர்வதேசத்தை நாடியுள்ளோம் - வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத் தலைவி
இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களை தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கிறது என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.
காரைதீவு நூலக கேட்போர் கூடத்தில் இன்று (23.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மாநாடு
இதன்போது எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள மாநாடு தொடர்பிலான தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த நிகழ்விற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வருகை தந்தவர்கள் தங்களின் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளதுடன் குறித்த மாநாட்டிற்கு தங்கள் ஆதரவுகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை
இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் தலைவி, எதிர்வரும் 30ஆம் திகதி நடக்கவிருக்கும் அந்த சர்வதேச மாநாடானது எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையும் நீதியும் வேண்டி நடைபெறவுள்ளது.
நாங்கள் பலமுறை பல ஜனாதிபதிகளிடம் மாறி மாறி எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கேட்டும் எமக்கு எந்தவித தீர்வும் கிடைக்காத பட்சத்திலேயே நாங்கள் சர்வதேசத்தை நோக்கி சென்றிருக்கின்றோம்.

எங்களது உறவுகளின் இந்த போராட்டத்தை இலங்கை அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறைக்குள் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு இந்த உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை. அதனால் தான் நாங்கள் நமது சர்வதேச பொறிமுறையை நோக்கி எங்களது போராட்டத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன், உபதவிசாளர் கி.ஜெயசிறில், கல்முனை முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ச.சந்திரசேகரம், சிவில் சமூக செயற்பாட்டாளர் தா.பிரதீவன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


