தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது மகன் கைது
சொந்தத் தந்தையைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை, உக்குவளை - குறிவல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவத்தில் உக்குவளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே, மகன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 16 வயது சந்தேகநபர் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.