மது அருந்தி விட்டு தாக்கும் மகன் மற்றும் பேரப்பிள்ளைகள்-வயோதிப பெண் பொலிஸாரிடம் விடுத்த கோரிக்கை
தான் உயிருடன் இருக்கும் வரை தன்னை திட்டி, தாக்காமல் இருக்குமாறு தனது பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்குமாறும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வயோதிப தாய் ஒருவர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமும் மது அருந்தி விட்டு தாக்கும் மகன் மற்றும் பேரப்பிள்ளைகள்
இந்த பெண்மணி கேகாலை வைத்தியசாலையில் 2வது விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். சில காலங்களுக்கு முன்னர் கணவர் உயிரிழந்து விட்டதாகவும் தற்போது இளைய மகன் வீட்டில் வசித்து வருவதாகவும் பெண்மணி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இளைய மகன் மற்றும் அவரது மகன்களான தனது பேரப்பிள்ளைகள் தினமும் மது அருந்தி விட்டு வந்து தன்னை திட்டி, தாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி மதுபானம் அருந்தி விட்டு, வந்தது திட்டி அச்சுறுத்தியதாகவும் பேரப்பிள்ளைகள் தலையில் தாக்கியதால், மயங்கி விழுந்து விட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
தலையில் ஏற்பட்ட வலி காரணமாக கேகாலை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பேரப்பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதில் பயனில்லை-மகனை மட்டும் அழைத்து அறிவுரை கூறுங்கள்
இந்த வயோதிப பெண் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை அதிகாரிகள், வைத்தியசாலையின் பொலிஸ் காவலரண் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதுடன் அவர்கள் பெண்ணிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
மதுபானம் அருந்த வேண்டாம் என அறிவுரை கூறும் போது, மகனும், பேரப்பிள்ளைகளும் தன்னை தாக்குவதாகவும் பேரப்பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதில் பயனில்லை என்பதால், தனது மகனை மாத்திரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அறிவுரை மாத்திரம் வழங்கி, தான் உயிர் வாழும் வரை எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கும் சந்தர்ப்பததை ஏற்படுத்தி தருமாறும் பெண்மணி பொலிஸாரிடம் கோரியுள்ளார்.
இந்த வயோதிப பெண்ணின் தலையில் காயங்கள் எதுவுமில்லை என்ற போதிலும் தழும்புகளை காண முடிகிறது எனவும் பெண்மணி வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின்னர், அவரையும் மகனையும் அழைத்து விசாரணை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




