நாட்டில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விளக்கம்
குற்றச் செயல்கள் தொடர்பிலான சான்றுகளை அழிப்பதற்காகவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், குற்றங்களுடன் தொடர்புடைய சான்றுகளை அழிக்கும் நோக்கிலேயே நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
விரிவான விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களின் ‘அதிட்டன’ அமைப்பின் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், அதனுடன் தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல கடினமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் வழங்கிய மக்கள் ஆணையாலேயே அரசாங்கத்தால் இத்தகைய கடினமான வேலைத்திட்டங்களைச் செயல்படுத்த முடிந்தது குறித்து மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
"சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 58 பாரிய அளவிலான குற்றவாளிகளை கடந்த காலத்தில் நாம் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு அழைத்து வந்தோம். அவர்கள் அந்த நாடுகளில் ஆடம்பர பங்களாக்கள், வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அக்காலகட்டத்தில் அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவர்களுடன் இணைந்து இந்தச் சொகுசு வசதிகளை அனுபவித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி எப்போதாவது தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறீர்களா? அல்லது ஊடகவியலாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டதா? நாங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளின் வெற்றி காரணமாகவே எதிர்க்கட்சியினர் தற்போது இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. நாம் விரட்டியடித்தது ஒரு அரசியல் குழுவை அல்ல, மாறாகப் பல குழுக்களை உள்ளடக்கிய அபாயகரமான, கொடூரமான சதிமிக்க குற்றவாளிக் கும்பலையே ஆகும். சீரழிந்த நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம் என தெரிவித்துள்ளார்.
தற்போது நிதி ஒழுக்கத்தைப் பேணி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம். அனைத்துத் துறைகளிலும் வருவாயைச் சரியாகத் திரட்டி, பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளோம். கடந்த 15 மாதங்களுக்குள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதுடன், அதிக பொருளாதார வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலிலும் இலங்கை இணைந்துள்ளது என மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.