ஆளும் கட்சியில் இணையும் எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள்..!
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிரணி பக்கம் உள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே இவர்கள் கட்சித்தாவ உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் சிலருக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளதாகவும் வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதற்கு ஆதரவு என்ற போர்வையில் தாவலை அரங்கேற்றுவதற்கான ஏற்பாடுகள் வெற்றியளித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆளுங்கட்சி பக்கம் செல்லமாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்
முதலாம் இணைப்பு
மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியின் சிலர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியில் இணைவு
ஜனாதிபதிக்கு ஆதரவு வெளியிட்டு இவர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை கட்டியெழுப்பும் வகையில் சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கும் நோக்கில் அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்யும் 12 பேர் ஏற்கனவே இந்த யோசனைக்கு ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

வழங்கப்படவுள்ள முக்கிய அமைச்சுப் பதவிகள்
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.