சில குற்றச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதிய சட்டங்கள் கிடையாது
சில குற்றச்செயல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதுள்ள சட்டங்கள் போதுமான அளவில் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதனாலேயே பாராளுமன்றத்தில் புதிய சட்டங்கள் நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சிலர் பதற்றமடைந்தாலும் அவ்வாறு பதற்றமடைகின்றார்கள் என்பதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காடடியுள்ளார்.
குற்றங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில், பொலிஸார், குற்ற விசாரணை திணைக்களம், ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவு மற்றும் நிதி குற்ற விசாரணை பிரிவு உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தற்போது தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் சுயாதீனமாக செயல்பட தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த நிறுவனங்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் வழங்கியதால், தற்போது அந்த நிறுவனங்கள் தங்களிடம் கிடைக்கும் முறைப்பாடுகளை பரிசீலித்து, குற்றச்சாட்டு கோப்புகளை தயார் செய்து, சட்ட நடவடிக்கைகளுக்காக தேவையான அறிக்கைகளை சமர்ப்பித்து, வழக்குகளை தாக்கல் செய்து, செயற்படுவதை தொடர்ந்துவருகின்றன.
சில குற்றச்செயல்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லாததால், பாராளுமன்றத்தில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ‘குற்றச்செயல்களால் பெறப்பட்ட சொத்துகளை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான’ சட்ட மூலம் ஊடாக, அரசியல்வாதி அல்லது தனிப்பட்ட நபர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துகளோ, பணமோ சம்பாதித்திருந்தால் அல்லது குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உருவாகும்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.