சமஷ்டிக்காகப் போராடுவது யார்..!
தேசத்தை அங்கீகரிக்கும் சமஷ்டிக் கட்டமைப்பே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையமுடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒரு தடவை தெளிவுபடுத்தியிருக்கிறது.
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கட்சிகள் தமது தரப்பு யோசனைகளைத் தருமாறு ஜனாதிபதி அண்மையில் கேட்டிருந்தார்.
அதற்கமைய முன்னணியானது 13ஆவது திருத்தத்தை நிராகரித்து சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.
அதேசமயம் கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த விக்னேஸ்வரன் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
13ஆவது திருத்த சட்டம்
தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றினதும் இறுதி இலக்கு கூட்டாட்சிதான் என்ற போதிலும் அதை அடைவதற்கான வழிவகை எது என்பதை தமது கட்சியும் உட்பட எந்த ஒரு கட்சியும் வெளிப்படுத்தல்லை என்று அவர் கூறியுள்ளார்.
சமஷ்டியை அடையும் வழி தெரியாதபடியால் அரசியலமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தத்தைப் பலப்படுத்தி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வோம். பின்னர் அதிலிருந்து மேலும் முன்னேறி செல்லலாம் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சமஷ்டியைப் பெறுவதற்கான வழிவகை குறித்த அவருடைய கருத்து யதார்த்தமானது.
கடந்த 14ஆண்டுகளாக மட்டுமல்ல அதற்கு முன்னரும் அதாவது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் தமிழ் மிதவாதிகளிடம் சமஷ்டியை அடைவதற்கு உரிய வழிவரைபடம் எதுவும் இருக்கவில்லை.
ஒப்புக்கொண்ட விக்னேஸ்வரன்
கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் கட்சிகள் போராடுகிறோம் போராடுகிறோம் என்று கூறிக்கொள்கின்றன.
ஆனால் அந்த அரசியல் இலக்கை நோக்கி எவ்வாறு அறவழியில் போராடுவது என்பது குறித்து எந்த ஒரு கட்சியிடமும் தெளிவான பார்வையோ அல்லது அதற்கு வேண்டிய அரசியல் ஒழுக்கமோ அல்லது அதற்கு தேவையான அற்பணிப்போ இருப்பதாகத் தெரியவில்லை.
விக்னேஸ்வரன் அது தன்னிடமும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதற்காக அதாவது போராட்டத் தயாரில்லை என்பதற்காக அல்லது போராடத் தெரியவில்லை என்பதற்காக கிடைப்பதைப் பெற்றுக் கொள்வது என்ற தத்துவம் ஏற்புடையதல்ல.
கிடைக்கும் அரைகுறைத் தீர்வை ஏற்றுக் கொண்டால் அதை நோக்கியே தமிழ் மக்களின் கவனமும் சக்தியும் குவிக்கப்படும்.
மாகாண சபைக்குள் எப்படி தங்களுடைய இருப்பைத் தக்கவைப்பது என்பதிலேயே கட்சிகளின் கவனம் முழுதும் குவிக்கப்பட்டு விடும்.
அதாவது தனது இறுதி அரசியல் இலக்கை நோக்கி முன்னேறுவதற்குப் பதிலாக தமிழ் அரசியலானது மாகாண சபைகளுக்குள் தேங்கி நின்றுவிடும்.
இந்தியாவுக்கு எதிராக கோஷம்
கிடைக்கும் இடைக்கால ஏற்பாடுகளை நிராகரித்துவிட்டு விட்டுக்கொடுப்பின்றிப் போராடிய மக்களே இறுதி வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால், அப்படிப்பட்ட போராட்டம் எதுவுமே நடக்கவில்லை என்பதுதான்.
இப்பொழுது நடக்கும் எல்லாப் போராட்டங்களும் பதில் வினையாற்றும்-ரியாக்டிவ்-போராட்டங்களே. எதிர்த் தரப்பின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்புக் காட்டுபவை.
13ஐ நிராகரிக்கும் முன்னணியானது சக கட்சிகளுக்கும் இந்தியாவுக்கும் எதிராகக் கோஷம் எழுப்பினால் மட்டும் போதாது. அதைவிட ஆழமான பொருளில் சமஷ்டிக்காகப் போராடவும் தியாகங்களைச் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.
சமஷ்டியை அடைவதற்கான வெளியுறவுக் கொள்கை எது என்பதை வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தாயகத்தில் நிலப்பறிப்பு மற்றும் சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு எதிராக அக்கட்சிதான் அதிகமாகப் போராடுகிறது.
அதன்மூலம் தமிழ் அரசியலை அவர்கள் நொதிக்கச் செய்கின்றார்கள். ஆனால் அந்தப் போராட்டங்களில் அநேகமானவை ஒரு கட்சிப் போராட்டங்கள் அல்லது சிறு திரள் போராட்டங்கள், அல்லது கவன ஈர்ப்பு போராட்டங்கள். அதாவது தொகுத்துக்கூறின் அரசாங்கத்துக்கு தாக்கமான விதங்களில் சேதத்தை ஏற்படுத்தாத போராட்டங்கள்.
சிங்கள பௌத்த மயமாக்கல்
கடந்த 14ஆண்டுகளில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி எழுக தமிழ் போன்றவற்றை நீக்கிப் பார்த்தால் பெரும்பாலான போராட்டங்கள் கவனஈர்ப்பு போராட்டங்கள் அல்லது சிறு திரள் போராட்டங்கள்தான்.
இப்போராட்டங்களால் அரசாங்கத்துக்கு பொருளாதார ரீதியாக நட்டம் எதுவும் ஏற்படவில்லை. குறைந்தபட்சம் அரசு நிர்வாகத்தை முடக்குவதற்குக்கூட இந்த போராட்டங்களால் முடியவில்லை. அதாவது இப்போராட்டங்களால் அரசாங்கத்துக்கு நோகக் கூடிய விளைவுகள் ஏற்படவில்லை. அல்லது வெளியுலகத்தைக் கவர்ந்திழுக்கும் சக்தியும் இப்போராட்டங்களுக்கு இருக்கவில்லை.
இந்த விடயத்தில் விக்னேஸ்வரன் மட்டுமல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி, குத்துவிளக்கு கூட்டணி உட்பட எல்லாருமே பொறுப்பாளிகள் தான். ஈழத் தமிழர்கள் சமஷ்டிக்காகத் தாக்கமான விதத்தில் போராடவில்லை என்பதைத்தான் கடந்த 14 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன.
இந்த பலவீனத்தை கண்டுபிடித்த காரணத்தால்தான் அரசாங்கம் துணிச்சலாக சிங்கள பௌத்த மயமாக்கலைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. நாடு பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. ஐநாவில் மனித உரிமைகள் பேரவைக்குள் ஒரு பொறிமுறை இலங்கைக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ் தரப்பின் போராட்டங்கள்
அது போர்க் குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரித்துக் கொண்டிருக்கிறது. அது ஒரு பலவீனமான பொறிமுறைதான். மனித உரிமைகள் ஆணையருடைய அலுவலகத்துக்கு உட்பட்ட ஒரு பொறிமுறைதான். என்றாலும் அது இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுக்கக் கூடியது.
இப்படிப்பட்டதோர் பின்னணியில், அரசாங்கம் பன்னாட்டு நாணய நிதியம், மேற்கு நாடுகள், இந்தியா, ஜப்பான். ஐ.நா போன்றவற்றுக்குப் பதில்கூற வேண்டிய ஒரு காலகட்டத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை அடக்கி வாசிக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாகக் காணப்படுகிறது.
அண்மைக் காலங்களில் சிங்கள பௌத்த மயமாக்கல் பல்வேறு தளங்களில் பல்வேறு பகுதிகளில் செறிவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்குக் காரணம் என்ன? காரணங்கள் இரண்டு. ஒன்று, தமிழ் தரப்பின் போராட்டங்கள் அரசாங்கத்துக்கு நோகக் கூடியவைகளாக இல்லை என்பது. இரண்டாவது காரணம், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எப்படித் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளை கவர்வது என்று ஜனாதிபதி சிந்திக்கின்றார்.
ராஜபக்சர்களின் ஆதரவு
ஏனெனில் ஜனாதிபதி தேர்தலில் அவர் பெரும்பாலும் ராஜபக்சர்களின் ஆதரவோடு களமிறங்கும் வாய்ப்புக்களே அதிகம் தெரிகின்றன.
அவ்வாறு ராஜபக்சர்களோடு இணைந்து வாக்குக் கேட்டால் தமிழ் வாக்குகள் தனக்கு அதிகளவு கிடைக்காது என்றும் அவர் பயப்பட முடியும்.
ஏனென்றால் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஒரே ஒரு அரசியல் தீர்மானத்தில் ஒற்றுமையாக முடிவெடுத்து வந்திருக்கிறார்கள். அது ராஜபக்சர்களுக்கு எதிராக வாக்களிப்பது என்ற தீர்மானம்தான்.
கடந்த 14 ஆண்டுகளாக நடந்த எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் தமிழ் மக்கள் பெரும் போக்காக ராஜபக்சங்களுக்கு எதிராகத்தான் வாக்களித்தார்கள்.
அதிலும் குறிப்பாக ராஜபக்சர்களின் ஆணையை ஏற்று யுத்தத்தை வழிநடத்திய தளபதியான சரத் பொன்சேகா, ராஜபக்சர்களுக்கு எதிராகத் திரும்பிபோது அவருக்கும் வாக்களிக்கக்கூடிய ஒரு நிலைமை காணப்பட்டது.
எனவே ராஜபக்சேக்களின் பதில் ஆளாகத் தேர்தலில் களமிறங்கினால் தமிழ் வாக்குகளைத் திரட்டுவதில் தனக்கிருக்கக்கூடிய நிச்சயமின்மைகளைக் கவனத்தில் எடுத்து, ரணில் தனிச்சிங்கள வாக்குகளைத் திரட்டுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போலத் தெரிகிறது.
அதனால்தான் சிங்களபௌத்த மயமாக்கலையும் நிலப்பறிப்பையும் முடுக்கி விட்டுள்ளார். அதிலும் அரசாங்கத்துக்கு நோகாத தமிழ் கட்சிகளின் போராட்டங்கள் அவருக்கு சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
எவ்வாறெனில், சிங்கள பௌத்த மயமாக்களுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் போராடப்போராட அது சிங்கள மக்கள் மத்தியில் ரணிலுக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை உயர்த்தும். சிங்கள பௌத்தத்தைப் பாதுகாப்பதற்காக அவர் விகாரைகளைக் கட்டுகிறார் என்று அவர்கள் நம்புவார்கள்.
எனவே அரசாங்கத்திற்கு எதிரான தமிழ் கட்சிகளின் சிதறலான,தொடர்ச்சியற்ற சிறுதிரள் போராட்டங்கள் மறைமுகமாக ரணிலின் வாக்கு வங்கியைப் பலப்படுத்துகின்றவைகளாகவே காணப்படுகின்றன.
ரணிலின் வாக்கு
மாறாக அரசாங்கத்தின் பொருளாதாரத்தை முடக்கும் விதத்தில் அல்லது அரச நிர்வாகத்தை முடக்கும் விதத்தில் அல்லது வெளி உலகத்தின் கவனத்தை ஈர்த்து வைத்திருக்கும் விதத்தில் போராடுவதென்றால் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் போராட வேண்டும்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான போராட்டத்தை மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் கவனித்தன.
கடந்த 14ஆண்டு காலமாக தமிழ் மக்கள் மத்தியில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பெரியவை அல்லது கவனிக்குப்புக்கு உரியவை என்று கருதத்தக்க போராட்டங்கள் அனைத்தும் பெருந்திரள் போராட்டங்கள்தான்.அவை ஒரு கட்சிப் போராட்டங்கள் அல்ல. பல கட்சிப் போராட்டங்கள்தான்.
கட்சிகளும் சிவில் சமூகங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகளும் சமயப் பெரியார்களும் இணைந்து முன்னெடுத்த போராட்டங்கள்தான்.
அண்மையில்கூட முல்லைத்தீவில் ஒப்பீட்டுளவில் கவனிப்புக்குரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அண்மைக் காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலங்களில் அது ஒப்பீட்டளவில் பெரியது. அது கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட ஒரு போராட்டம். அது ஒரு கட்சிப் போராட்டம் அல்ல.
எனவே கடந்த 14 ஆண்டு கால அனுபவத்தைத் தொகுத்துப் பார்த்தால் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், கட்சிகளும் சிவில் அமைப்புகளும் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புக்களும் இணைந்து போராடினால்தான் அது வெளியுலகத்தின் கவனத்தை ஈர்க்கும். இல்லையென்றால் அவை ரணில் விக்ரமசிங்கவின் சிங்கள பௌத்த வாக்கு வங்கியைத்தான் வளர்க்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |