அறுகம்பை குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
அம்பாறை, அறுகம்பை சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் இன்று (25.08.2023) காலை நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும், அடுத்த 10 வருடங்களுக்குள் அதனை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்று (25) முற்பகல் அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை மற்றும் பீனட்பாம் கடற்கரைகளைப் பார்வையிடும் கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.
உடனடியாக நடவடிக்கை
அந்த சுற்றுலாப் பிரதேசங்களின் குறைபாடுகளை ஆராய்ந்த பின்னர், அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடினார். அதன்பின், அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்களுடன் கலந்துரையாடி, சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார்.
அருகம்பே கடற்கரைப் பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்கையில் அங்குள்ள மீன்பிடித் துறைமுகத்தை , தேவையான வசதிகளுடன் வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பான யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி வீரசிங்க ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.
அது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி , இப்பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இங்கு சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுவோருக்கு வியாபார ஸ்தலங்களுக்கான நிரந்தர அனுமதிப்பத்திரம் இன்மையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இதற்குத் தீர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.







